சிறுபான்மை சமூகத்தினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நீடிக்கின்றன – ஹுஸைன்

ஹுஸைன்

சிறுபான்மை சமூகத்தினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நீடிக்கின்றன – ஹுஸைன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் ஹுஸைன் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் முன்வைக்கவுள்ளார். அவ்வறிக்கை முன்வைக்கப்பட்ட பின், குறித்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

கடந்த மாதம் மனித உரிமைகள் ஆணையாளரால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.  ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் நிலைமாற்றுகால நீதி கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக முடங்கிப் போயுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாம் குறிப்பிட்டவாறு, ஆக்கபூர்வமான ஒத்துழைப்புடன், முக்கியமான கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும். நம்பிக்கையைக் கட்டியெழுப்பும், சில நடவடிக்கைகளின் முன்னேற்றம் போதுமானதாகவும், தீர்மானகரமானதாகவும் இல்லை. அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகள் இல்லை. அத்துடன், அவற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் இனப் பதற்றம் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் முழுவதுமாக நீங்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கு தீர்வு வழங்குவது, போன்றவற்றிலும் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
எனவே, இலங்கையில், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும். எனவே, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஏனைய வழிகளை ஆராயுமாறு உறுப்பு நாடுகளை தாம் கேட்டுக் கொள்வதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் ஹுசெய்ன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த விவாதத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான உயர்மட்ட குழு பங்கேற்கவுள்ளது. அமைச்சர்களான சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாலிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவினர் ஜெனிவாவில் விளக்கமளிக்க உள்ளனர். இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை விடயத்தில் அமெரிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் உதவி பிரதிநிதி கெலி கரியையும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் சந்தித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]