சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே உள்ளது வெளிப்படையான பேரினவாதமாகும் – நஸீர் அஹமத் தெரிவிப்பு

மாகாண சபை ஆட்சி பிரதேச மக்களின் கைகளில் உள்ளது என்று கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு ஆகிய சிறுபான்மை இனங்கள் வசிக்கும் மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே உள்ளது வெளிப்படையான பேரினவாதமாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

சமகால வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிருவாகம் தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை 03.06.2018 வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

இலங்கையின் பேரினவாத ஆட்சிப் பொறி முறை அதிகாரப் பகிர்வு என்றில்லாமல் அதிகாரப் பரவலாக்கம் என்றவாறு தொடர் கதையாகவே உள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் கூடுதலாக வாழ்கின்றார்கள்.

இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு நாடாகும், இந்த மாகாணங்களுக்கு முதலமைச்சர்களும் உள்ளார்கள்.

ஆனால், வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களினதும் அதிகாரங்கள் அதனதன் முதலமைச்சர்களின் கரங்களில் முற்று முழுதாக இருந்து இயங்குகின்ற நிலையில் வடக்கு கிழக்கு மாணகாணங்களின் நிருவாக அதிகாரம் அந்த மாகாண முதலமைச்சர்களின் கைகளில் இல்லை.

சிறுபான்மை மக்களைக் கொண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுகை அதிகாரம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாகாண ஆளுனர்களின் கரங்களிலயே பெருமளவுக்கு காணப்படுகின்றது

இதனால் வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களின் அதிகாரத்துக்கான சுதந்திர எல்லைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்து வந்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்களும் ஏனைய மாகாண முதலமைச்சர்கள் போன்றே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இருந்தும் ஏதோ ஒரு வகையில் ஆளுனர்கள் இவர்களது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் முயற்சிகளையே முன்னெடுத்து வந்தள்ளனர்.

எனினும் கிழக்கு மாகாணத்தில் எனது தலைமையிலான சுமார் இரண்டரை வருட ஆளுகைக் காலத்தில் மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு படிப்பினைகளை கிழக்கு மக்களுக்கும் ஏனைய மாகாண மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வூட்டக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக உள்ளுராட்சிக்கு உட்பட்ட அதிகார பிரயோகங்களை அமுல்படுத்தி சேவையாற்ற முடிந்தது.

மாகாணமொன்றுக்கு உள்ளுராட்சியின் அதிகாரங்கள் பரிபூரணமாகக் கிடைப்பதை இந்தக் காலத்தில் உறுதிப்படுத்தவும் முடிந்தது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிதி சார் விடயங்களை உள்ளுராட்சிக்குப் பெற்றுக் கொடுக்கவும் முடிந்தது.

எவ்வாறாயினும், சிறுபான்மை இன மக்கள் தமது மாகாண ஆளுகையின் முழு அளவிலான அதிகார உரிமைகளைப் பெற்றுக் கொள்ள இன்னமும் நீண்டகாலம் பயணிக்க வேண்டும் என்பதையே சமகால நிகழ்வுகள் புலப்படுத்தி நிற்கின்றன.

இந்த விடயத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமை என்பது இன்றியமையாது. பிளவுபட்டு நிற்பின் சிறுபான்மைப் பிரதேசங்களை பேரினவாதம் தொடர்ந்தும் கோலோச்சும். மக்கள் வெறுமையை அனுபவிப்பார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]