சிரியா விவகாரம்: டிரம்பிற்கு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி

சிரியாவைச் சேர்ந்த சிறுமி பானா அல்-அமெத்(7), அலெப்போவில் நிகழும் தாக்குதல்கள், பொதுமக்களின் நிலை குறித்து டுவிட்டரில் பதிவுகள் இட்டு வருவதால், உலகப் புகழ் பெற்றவர். இந்த நிலையில், சிரியாவில் தாக்குதல்கள் அதிகமான நிலையில், தற்போது, அங்கிருந்து துருக்கி சென்று விட்டார்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, பானா அல்-அமெத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவர் என்றும், அலெப்போவில் இருந்த தங்களுடைய பள்ளி குண்டுவெடிப்பில் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், அதில் தனது நண்பர்கள் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 3 லட்சம் பேரில், 15000 பேர் குழந்தைகள் என்று சுட்டிக்காட்டியுள்ள  பானா அல்-அமெத், சிரியா குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் என டொனால்ட் டிரம்பிடம் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.