சிரியா மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் ஐ.நா. சபையில் ரஷ்யா கடும் கண்டனம்

சிரியா நாட்டிலுள்ள விமானப் படை தளத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.

சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்றுமுன்தினம் அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அங்கிருந்த ஏராளமான சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் இந்த அசுரத்தனமான தாக்குதலுக்கு சிரியா னாதிபதிக்கு ஜஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிரியா நாட்டிலுள்ள விமானப் படை தளத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்துக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் போக்கை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐ.நா.சபையின் தூதர்களும், அமெரிக்காவின் அராஜகத்தை கடுமையாக எதிர்த்துவரும் ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது அமெரிக்காவின் மீது ரஷ்யா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இந்த விவாதத்தின் பேசிய ரஷியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபை துணைத் தூதர் விளாடிமிர் சஃப்ரான்கோவ், இறையாண்மை கொண்ட நாடான சிரியாவின் மீது மூர்க்கத்தனமாக அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார்.

சிரியா அரசு தன் நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசிய ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி செய்துவரும் அட்டூழியத்துக்கு இனியும் நியாயம் கற்பிக்க முயற்சிக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]