சிரியா இனப்படுகொலையை கண்டித்து முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்!!

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து, வலி சுமந்த மண்ணான முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் மாபெரும் அழிவுகளைச் சந்தித்த முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிரியாவில் குழந்தைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் படுகொலைகளைக் கண்டித்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

சிரியாவில் இடம்பெற்றுவரும் மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிரியாவில் குழந்தைகள் முதல் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அவர்களின் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.