சின்னையாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – பதறுகிறது தேசிய சுதந்திர முன்னணி

வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

இது தொட்டமை டர்பாக தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் இனத்துவ அடையாளம் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. தமிழரோ, முஸ்லிமோ எவராக இருந்தாலும் தகுதியானவராக இருந்தால் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படலாம்.

ஆனால் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா போர் முடிவடைந்த பின்னர் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்றவர்.

அத்துடன், அவர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக பாதுகாப்பு நிபுணராக பணியாற்றியவர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவருக்கு ஊதியம் கொடுத்துள்ளது.

வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடற்படையில் இருந்து சட்டபூர்வமாக ஓய்வு பெற்றிருந்தாலும், அவரது ஓய்வு அரசியல் பழிவாங்கல் என்று கூறி தற்போதைய அரசாங்கம் அவரை மீண்டும் பணியில் சேர்த்து கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக நியமித்தது. இப்போது அவரை கடற்படைத் தளபதியாகவும் நியமித்துள்ளது.

கடற்படையின் மரபுகளை மீறி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் இருந்து நான்கு ஆண்டுகள் ஊதியம் பெற்ற ஒருவரை, அரசாங்கம் தளபதியாக நியமித்துள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவுக்கு சார்பாக செயற்படக் கூடிய ஒருவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் இல்லையா? என்றும் தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]