சினிமா பாடசாலை ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கயந்த கருணாதிலக்க

சினிமா பாடசாலையொன்று ஆரம்பிக்கப்படும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சினிமா துறைக்கு 70 வருடங்கள் மற்றும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தரங்கணி சினிமா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கணனி தலுகம சரசவி திரையரங்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். நீண்ட காலத்திற்குப் பின்னர் சரசவி திரைப்பட விருது விழாவை இம்முறை நடத்த முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வருடத்தில் நாட்டில் அனைத்து சினிமாத் திரையரங்குகளும் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பழைய திரைப்படங்களைப் பாதுகாப்பதற்கான விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரைப்பட விருது விழா பத்து வருடங்களுக்குப் பின்னர் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் சவால்களை இனங்கண்டு உள்நாட்டு சினிமாத் துறையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சினிமா துறையுடன் தொடர்புடைய அனைவரையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதற்காக முன்வைக்கப்படும் யோசனைகளைக் கருத்திற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரபல திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்தினத்தின் சேவையைப் பாராட்டி அவருக்கு விசேட விருது வழங்கப்பட்டதோடு விசேட திரைப்படச் சஞ்சிகையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கிவந்த அர்த்தசாத் எழுதிய சினிமா மாயா என்ற நூலும் அங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.