சித்தத்தை அடக்கியவர்கள் மட்டுமே சித்தர்களா?

சித்தத்தை அடக்கியவர்கள் மட்டுமா சித்தர்கள் ?

தேடலும் தருகையும் : இளஞ்சைவப் புலவர். த.கி.ஷர்மிதன்.

சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் செயற்பாடுகள் என்ன? அவர்களின் நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இவ்வாறான வினாக்கள் எம்மிற் பல பேருக்கு அவ்வப்போது தோன்றும் கேள்விகள் தான். சித்தர்கள் என்பதும் எம் கண் முன் தோன்றும் உருவம், சடை முடி, அழுக்கான உடம்பு, குகை வாசி போன்ற இன்னும் பிற அம்சங்கள்தான். ஆனால் உண்மையில் இதுதானா சித்தர்? என்பது விடை காண முடியாத் தேடல் அல்லவா! நம்மிற் பலருக்குச் சித்தர்கள் பற்றி எழும் சந்தேகங்களுக்கு சிறிய விளக்கத்தையாயினும் அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

சித்தர்கள் என்பவர்கள் யார்?
சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் யார்? என நமக்குக் கேள்வி எழுவதுண்டு, நாம் ஏன் சித்தர் ஆக முடியாது? என்ற கேள்வியும் அடிக்கடி எழுவதுண்டு. ஆம், மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்கு மட்டுமே ஓரளவு சாத்தியமாகலாம்.

சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டுமே சித்தர்களா?. இல்லை. தன்னையும், இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச இரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

சித்தர்கள் பற்றித் தேடல் செய்யும் போது, சித்தம்,சித்து, சித்தி, சித்தன் போன்ற சொற்கள் உலவுவதை நாம் காண முடியும். இச்சொற்கள் ஒன்றிலொன்று தொடர்பானவை. சித்தம் வென்று, சித்துக்கள் பெற்று, சித்தி பெற்றவன் சித்தன் ஆகிறான். இதுவே சித்தரியலின் அடிப்படை ஆகின்றது எனலாம்.

சொற் பொருள் விளக்கம்

சித்தம், சித்து, சித்தி, சித்தன் போன்ற சொற்களில் வேராய் அமையும் சொல், “சித்” என்பதாகும். இதன் அர்த்தம் “அறிவு” என்பதாகும். இதனடிப்படையில், சித்தர்கள் என்பவர்கள் “பேரறிவு படைத்தவர்கள்” எனவும் “பேரறிஞர்கள்” எனவும் கொள்ளப்படுகிறது.

சித்தர்கள்
Siththar

மற்றுமொரு வகையில், சித்தம் (மனமும் புத்தியும் ஒருசேர்ந்த அம்சம் சித்தம் என்கிறார் பதஞ்சலி.) என்பது எண்ணமும் செயலும் ஒருங்கே சேர்ந்த வடிவம் ஆகும். இதனை ஒன்றுபட்ட தன்மை என்று கூடச் சொல்லலாம். மனத்தையும் புத்தியையும் ஒன்று சேர்த்தல் என்பது மிகக் கடினமான காரியம். இவற்றை ஒன்று சேர்க்கும் போது நாம் நினைத்ததை அடைய முடிகிறது. இவ்வம்சம் சாதாரணமாகவே எம் நிகழ் வாழ்வில் உண்டு. ஓர் விடயம் நாம் நினைத்தபடி இருக்க முழுமூச்சாய் உழைக்க வேண்டும் எனக் கருதுகிறோம். அந்ந மூழுமூச்சே(எண்ணமும் செயலும் ஒன்றை நோக்கியே இருத்தல்) சித்தம் எனலாம். மனமும் புத்தியும் ஒன்றுபட்டு நிற்கும் போது நினைப்பவை சித்தமாகின்றன. இத்தகு சித்தத்தை (எண்ணமும் செயலும் ஒருங்கு சேர்ந்த நிலை) ஒடுக்கி, சித்தத்தை சிவன்பால் வைத்துச் சிந்தனையில் மூழ்கியவர்கள் சித்தர்கள்.

Agathyar
Agathyar
 இன்னுமொரு வகையில், சித்தி என்பது ‘அடைதல்’ எனப் பொருள்படும். இதனை நாம், அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது உண்டு. “பரீட்சையில் சித்தி அடைந்து விட்டேன்” என பலபேர் கூறக் கேட்டிருப்போம். இதன்படி, “வாழ்க்கை எனும் பரீட்சையில் சித்திஅடைந்தவர்கள் சித்தர்கள்” எனலாம். ஆனாலும், சித்தரியலில் இப்பதம் மிகுந்த பொருள் உடையது. “பெறத்தக்க பேறாகிய சாயுச்சிய நிலையை (ஞான மார்க்க வழி நின்று அடையும் முத்தி நிலை) அடையப் பெறுதலே சித்தி. இத்தகு சித்தியைப் பெற்றவர்களே சித்தர்கள் ஆவர்.

இவ்வாறு சித்தர் என்பதற்கு பல பொருள்கள் ஆய்வாளர்களாலும் சான்றோராலும் எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனாலும் பொருள் கூறி இலக்கணப்படுத்தக் கடினமான ஓர் விடயமே சித்தர் மரபு என்பது என் எண்ணம்.

 சித்தர்கள் என்பார் யாவர்?

சித்தர்கள் என்பவர்கள் யாவர்? எனும் வினாவுக்கு பல அறிஞர்களும் பலவாறு பொருள் தருகின்றனர். ஆனாலும் அவை முற்றுப் பெற்றவை அல்ல. சித்தர்கள் என்பதற்கான பொருளைச் சற்று நோக்குவோம்.

சித்தி (அனுபூதி நிலை) அடைந்தவர்கள் சித்தர்கள். சித்தம் வென்றவர்கள் சித்தர்கள். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். சித்துக்களில் வல்லவர்கள் சித்தர்கள். இவ்வாறாகப் பலவாறு கூறப்படும் அனைத்து விளக்கங்களுக்கும் பொருத்தமுடையவர்கள் சித்தர்கள் என்றால் சாலப் பொருந்தும்.

சித்தர்கள்
Thirumoolar

சித்தர்கள் என்பவர்கள் யார்? என்பதற்குச் சித்தர்களே விளக்கம் தந்துள்ளனர். அவ்வகையில், திருமூலர், சித்தர் என்றால் யார்? என்பதை தனது பாடலில் விளக்கியுள்ளார்.

“சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்

முத்தரம் முத்திக்கு மூலத்தவர் மூலத்துச்

சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே”

என்கிறார் திருமூலர். மற்றும் “சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவன் சித்தன்” என்கிறார் அகத்தியர். “வாலையைப் பூசிப்பவன் சித்தன்” என்கின்றனர் கொங்காணர், கருவூரார் போன்றோர். “கர்ம வினை தோன்றாத வண்ணம் செய்பவனே சித்தன்” என்கிறார் சட்டை

முனி, இதனை,

“எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி

ஏகாமல் வாசனையை யடித்தோன் சித்தன்”

என்கிறார் சட்டைமுனி, “யோக நிலையில் குண்டலினியை மேலே எழுப்பிப் பயன்பெறபவன் சித்தன்” எனக் குறிப்பிடுகிறார் இராமதேவர். இவ்வாறு பல விளக்கங்கள் சித்தர் அல்லது சித்தன் பற்றிக் குறிப்பிடப்படினும், மேற்கூறப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் பொருத்தமானவர்கள் அல்லது இலட்சணம் ஆனவர்கள், மேற்கூறப்பட்ட அம்சங்களைத் தன்னகத்தே கொண்டவர்களே சித்தர்கள் எனலாம்.

சித்தர்களின் தொகை

சித்தர்கள் என்பார் இவ்வளவு பேர்தான் என அறுதியிட்டுக் கூறுவது கடினம். ஆனாலும் பொதுவாக சித்தர்கள் பதினெண்மர் என்பது பொதுவழக்காயிற்று. இருப்பினும், வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயல்வது முறையன்று. 18 எனக் கூறப்படும் எண்ணிக்கையும் மாறுபாடு உடையது, அந்த பதிணெண் சித்தர்கள் யார் ?யார்? என்பதும் பெரும் பிரச்சினை, இருப்பினும் 18 சித்தர்களை வருமாறு பட்டியலிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

1. கும்பமுனி, நந்திமுனி, கோரக்கர், புலிப்பாணி, புசுண்டர்ரிஷி, திருமூலர், தேரையர், யூகிமுனி, மச்சமுனி, புண்ணாக்கீசர், இடைக்காடர், பூனைக்கண்ணர், சிவவாக்கியார், சண்டிகேசர், ரோமரிஷி, காலாங்கி, போகர், சட்டநாதர் எனப் 18 போர். (இது கால ஒழுங்கின்படியான வரிசை முறையன்று)

2. அகத்தியர், புலத்தியர், புசுண்டர், நந்தி, திருமூலர், காலாங்கிநாதர், போகர், கொங்காணர், சட்டைமுனி, ரோமமுனி, மச்சமுனி, கருவூரார், தன்வந்திரி, புண்ணாக்கீசர், கோரக்கர், யூகிமுனி, தேரையர், இடைக்காடர் எனப் பதினெண்மர்.

3. நந்தீசர், அகத்தியர், திருமூலர், சிவசாக்கியார், பட்டினத்தார், பாம்பாட்டி, இடைக்காடர், அகப்பேய், குதம்பை, பத்திரகிரியார், கடுவெளி, அழுகணி, கொங்காணர், காகபுசுண்டர், உரோமரிஷி, சட்டைமுனி, போகர், இராமதேவர் போன்ற 18 பேர். (இவர்கள் பெரும்பாலானவர்களால் அறியப்பட்டவர்கள் ஆவர்) இவ்வாறு பலவாறு 18 சித்தர்கள் எனும் எண்ணிக்கை கூறப்படினும் யார்? யார், என்பது கூறப்படாத நிலையில், இன்றும் மலைப் பகுதியல் வாழ்ந்து வருவதாகவும் கருத்து நிலவுகிறது. (சித்தர் பாடல் தொகுப்புக்களில் பெயர்களில் மாற்றம் இருப்பது கவனினக்க)

இவற்றின் வழி சித்தர்களுள் 18 பேர் சிறப்பிடம் பெறுகின்றனர் எனக் கருதலாம். ஆயினும், இவர்கள் யார்? யார்? என்பது விடையில்லா வினா என்றே கூறத் தோன்றுகிறது. இத்தகு சித்தர்கள் மருத்துவர்களாக சோதிடராக இருந்திருக்கின்றனர். பலர் இத்தகு அம்சங்கள்

அடங்கிய பாடல்களையம் அளித்துள்ளனர். அவை மிகவும் நுட்பமான பெருள் நிறைந்தவை எனலாம்.

சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலர்,

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே”

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். ஆக, தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து, இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.

– சித்தர் பாதம் போற்றி! போற்றி! –

கருவி நூல்கள்:

1. சித்தர்களின் சித்தாந்தம் – முனைவர். சம்பத்து

2. சித்தர்கள் புரிந்த அற்புதங்கள் – வேணு சீனிவாசன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]