சிங்களத்தில் தண்டப்பத்திரம் தந்தமையால் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்த சி.தவராசா

சிங்களத்தில் தண்டப்பத்திரம்(தடகொல) எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பிரசன்னமாகி இருந்தனர்.

இன்றைய தினம் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னர் சி.தவராசா ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் காரில் பயணித்த போது , திருநெல்வேலி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மறித்து காரின் முன்பக்க கண்ணாடியில். வரி அனுமதிப்பத்திரம் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தவில்லை என கூறி தண்டம் எழுத முற்பட்டனர்.

அதற்கு நான் கண்ணாடியில் ஒட்டி காட்சிப்படுத்த வேண்டும் என கட்டாயம் இல்லை. நீங்கள் வரி அனுமதி பத்திரத்தை கேட்டால் அதனை நான் காண்பிக்க முடியும் என்றேன்.

பின்னர் நான் ஆசனப்பட்டி அணிய வில்லை என தண்டம் எழுத முற்பட்ட போது, நான் அதற்கு அனுமதித்தேன். அப்போது அவர்கள் சிங்களத்தில் ஆசனப்பட்டி அணியாமை என தண்டம் எழுதித் தந்தார்கள்.

அத்தோடு தமது பொறுப்பதிகாரி நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து தண்டம் ஆவது எழுத வேண்டும் என எமக்கு பணித்துள்ளார். அதனாலே தாம் தண்டம் எழுத வேண்டிய நிர்பந்ததில் உள்ளோம் என எழுதி தந்தார்கள்.

எனக்கு சிங்கள மொழி தெரியாதமையால் சிங்கள மொழியில் எழுதி இருந்தமையை வாசிக்க முடியவில்லை. அதனால் என் மொழியுரிமை மீறப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.

எனது முறைப்பாட்டின் பிரகாரம் இன்றைய தினம் விசாரணைகள் நடைபெற்றன. அதில் வாகன அனுமதிப்பத்திரம் காட்சிப்படுத்தாமை தண்டப்பணம் செலுத்த வேண்டிய குற்றமில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டார்.

சிங்கள மொழியில் எழுத காரணம் தமிழ் மொழி எழுத்த் தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இல்லாமையே காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கு நான் பொலிஸார் பதவி உயர்வு பெற இரண்டாம் மொழி தெரிந்திருக்க வேண்டும் என இருக்கும் போது இரண்டாம் மொழி தெரியவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினேன்.

தமிழ் மொழியில் எழுதி கொடுப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]