சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய யுவதி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட வவுனியா யுவதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை (18.03.2018) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபானின் பிரசன்னத்துடன் மீட்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 நண்பகலளவில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் செல்லும் வீதியில் கிரான் பிரதேச செயலகத்திற்குச் சமீபமாக மரங்களடர்ந்த பகுதியில் மகாவலி கிளை ஆற்றின் கரையில் இரத்தவாறாக இந்த யுவதியின் சடலம் கிடப்பது பற்றி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகம் புலிபாய்ந்தகல், மற்றும் குடும்பி மலை (தொப்பிகல) பிரதேசத்திற்குச் செல்லும் வீதி மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் கிரான் சந்தியிலிருந்து பிரிகிறது.

அந்த ஒரு வழியாகத்தான் பரந்து விரிந்து கிடக்கும் கிரான் புலிபாய்ந்தகல் பகுதிக்குச் செல்ல வேண்டும். கிரான் சந்தியிலிருந்து ஒரு சில மீற்றர் தூரத்திற்குள் கடைகளும் வீடுகளும் முடிவடைகின்றன. அதனைத் தாண்டினால் வீதியின் ஒரு புறம் வயலும் காடும், மறுபுறம் மகாவலி கிளை ஆறும் அமையப் பெற்றுள்ளது. அதனைக் கடந்தால் கிரான் பிரதேச செயலகம் வருகிறது.

எவ்வாறாறேனும் படுகொலை செய்யப்பட்ட இந்தப் பெண் கிரானிலிருந்து இந்த வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும், அல்லது அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.

இந்த யுவதி குடும்ப வறுமை காரணமாக சவூதி அரேபியாவில் 3 வருடங்கள் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் பார்த்து விட்டு சனிக்கிழமை தான் நாடு திரும்புவதாக வவுனியாவிலுள்ள தனது தாய்க்கும் சகோதரிக்கும் அறிவித்திருக்கின்றார்.

ஆனால், அவர் தாய் வீடு போய்ச் சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிரான் மகாவலி கிளை ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா கணேசபுரம் மரக்காரம் பளை வீதியைச் சேர்ந்த குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான ராமலிங்கம் மருதை சுதர்சினி (வயது 33) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இவரது தந்தை கடந்த 10 வருடங்களுக்கு முதல் இந்தியாவுக்குச் சென்ற வேளையில் காணாமல் போய் விட்டார்.

அதன் பின்னர் தனது 3 பெண் மக்களையும் ஒரு ஆண் மகனையும் வளர்ப்பதற்காக சுதர்சினியின் தாய் வவுனியாவிலுள்ள உணவு விடுதியொன்றில் கூலித் தொழில் செய்து வந்த வேளையில் விபத்தொன்றில் சிக்கி கால் முறிந்தபோது குடும்பக் கஸ்டம் காரணமாக சுதர்சினி வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

சுதர்சினியின் சடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் மறு கரையில் அவரது கைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட கடவுச் சீட்டில் அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவரவே அங்குள்ள வவுனியா மரக்காரம் பளை பிரிவு கிராம சேவையாளர் ராகுல் பிரசாத் உடன் வாழைச்சேனைப் பொலிஸார் தொடர்பு கொண்டு சுதர்சினியின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

சடலம் காணப்பட்ட மகாவலி கிளை ஆற்றின் சற்றுத் தொலைவின் ஒரு பகுதியில் சுதர்சினி அணிந்திருந்ததாக நம்பப்படும் காலணிகள், காதணி, சுதர்சினியைத் தாக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படும் உடைந்த போத்தல் கண்ணாடிகள், இரத்தக் கறை, தலைமுடி என்பனவும், இன்னும் சற்றுத் தொலைவில் சுதர்சினியின் சூட்சேசும் அதற்குள் பெண்கள் அணியும் உள்ளாடைகள், சுகாதாரத் துவாய்கள், வாசனை சோப்கள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் காணப்பட்டன.

வெதுப்பியும் (ழுஎநn) ஒரு பொதியில் வேறொரு இடத்தில் ஆற்று நீரோட்டத்தில் கரையொதுங்கிக் காணப்பட்டது.

சுதர்சினியின் மண்டை பிளக்கப்பட்டடிருந்தது இரத்தம் பீறிட்டு ஓடிய நிலையில் ஆடைகள் கிளிக்கப்பட்ட நிலையிலும் சடலம் ஆற்றில் புதர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தது.

சடலத்தை மீட்டு அதனைப் பார்வையிட்ட பதில் நீதிபதி ஹபீப் றிபான் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவக்கு அனுப்பி வைக்குமாறும் வவுனியாவிலுள்ள உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை அழைப்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் வாழைச்சேனைப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எஸ். பெரமுனவுக்கு உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]