சவூதி அரேபியாவில் மலையகப் பெண் கூறிய ஆயுதத்தால் குத்திக் கொலை

மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்துள்ளார். இவரின் உடல் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் அவர்களின் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இப்பெண் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது 41) மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரியவந்துள்ளது.

இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது குடும்ப வறுமையை போக்கிக் கொள்ளவென கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியா நாட்டின் றியாத் பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர் சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்த நிலையில் உயிரிழந்து போயுள்ளதாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

01.11.2016 அன்றைய தினத்தில் இவர் உயிரிழந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து உறவினர்கள் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றோடு தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக உயிரிழந்த உடலத்தை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டுள்ளனர்.

இதனையடுத்து பல்வேறுப்பட்ட இடங்களில் உடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் உதவிகளை நாடியுள்ளனர்.

இருந்தும் 5 மாதங்கள் கடந்த பின் குறித்த பெண்ணின் உடலம் 25.03.2017 அன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு (27.03.2017) நேற்று இரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது.
இதன்போது சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்த நிலையில் மாரடைப்பு காரணமாகவே இப்பெண் உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழை சவூதி அரேபியா நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருந்தும் உறவினர்களால் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் உடலத்தை மரண பரிசோதனை செய்யப்பட வேண்டும் என விடுத்த வேண்டுக்கோளுக்கமைவாக கொழும்பில் உடலம் மீண்டும் ஒரு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த பெண்ணின் இடுப்பு பகுதி மற்றும் கழுத்து பகுதி ஆகிய இடங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்திருப்பதாக இலங்கையின் வைத்திய அறிக்கை தெரிவித்துள்ளதாக அதன் சான்றிதழ்களுடன் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

இவ்வாறாக மலையகத் தோட்டப்பகுதியிலிருந்து குடும்ப பிரச்சினை மற்றும் வறுமையை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்களின் நிலை இவ்வாறாகவே அமைகின்றது.

எனவே, மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென செல்லும் பெண்கள் இவ்வாறான சம்பவங்களை அறிந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாகச் செல்வதை தடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் எமது குடும்பத்தின் உறவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் கருத்துத் தெரிவித்த உறவினர்கள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]