சவால்களை முறியடித்து மலையக மக்களுக்கான வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் : சோ.ஸ்ரீதரன்

சவால்களை முறியடித்து மலையக மக்களுக்கான வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப பூண்டுலோயா சீன் மேற்பிரிவு மற்றும் சீன் கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வீட்டுத்திட்டங்களைத் திறந்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,
மலையகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக இன்று தோட்டப்பகுதிகளில் புதிய கிராமங்கள் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய கிராமங்களை தோட்டப்பகுதிகளில் முன்னெடுத்துச் செல்வதில் பல சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டே முன்னெடுக்க வேண்டியுள்ளது.
காழ்ப்புணர்வாளர்கள் பல்வேறு இடையூறுகளை திரைமறைவில் செய்கின்ற போதும் அமைச்சர் திகாம்பரத்தின் தற்துணிவால் இந்த வீடமைப்புத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்லப்படுகின்றது. இதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பக்க பலமாகவுள்ளனர்.

மலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் என்பன தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படுவதால் இந்தத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கான வீடுகளை மக்கள் பிரதிநிதிகளாகிய மிகுந்த சந்தோஷத்துடன் திறந்து வைக்கின்றோம். மலையக மக்களை இனிமேல் எவரும் அற்ப சொற்ப சலுகைகளை வழங்கியும் பொய்வாக்குறுதிகளை கூறியும் ஏமாற்ற முடியாதென்பதை இன்றைய மலையக சமூகம் உணர்த்தியுள்ளது.

ஆகவே, மலையக மக்களுக்கான உரிய வேலைத்திட்டங்களை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேர்மையுடன் முன்னெடுக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]