சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைத்தார் மோடி

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் நோன்புதின வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை வெகுவிமரிசையாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

“”பௌத்த போதனைகளின் அடிப்படையில் சமூக நீதியின் மூலம் உலக சமாதானத்தை நிலைநாட்டுதல்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் வழிகாட்டலில் பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் கீழ் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்திய பிரதமரை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிடோர் வரவேற்றனர். இலங்கை தேசிய கலாச்சாரத்திற்கு அமைவாக நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய , பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச , ஐக்கிய நாடுகள் வைபவ அதிதிகள் விளக்கினை ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. மல்வத்த பீடாதிபதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் பஞ்சசீல வழிபாட்டு நிகழ்வை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க,முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரமர் டி.எம்.ஜயரத்ன, சபாநாயகர் கரு ஜயசூரிய அமைச்சர்கள் , 85 நாடுகளை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் , அரச பிரதிநிதிகள் , எதிர்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட இந்து கிறிஸ்தவ பௌத்த மதத்தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வெசாக் வைபவம் ஐக்கிநாடுகள் சபையினால் நடத்தப்படவேண்டும் என்றும் அதற்கான அதிகாரத்தை ஐக்கிநாடுகள் சபை வழங்கவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலுக்கு அமைவாக அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க்கில் சர்வதேச வெசாக் வைபவம் 2000ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தாய்லாந்தில் 11 முறையும் வியட்நாமில் இரு முறையும் இந்த சர்வதேச வெசாக்தினம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 14ஆவது தடவையாக ஐ.நா. வெசாக் வைபவம் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இது நிறைவடையவுள்ளது. நிறைவு வைபவம் வரலாற்று சிறப்பு மிக்க புனித தலமான கண்டி தலதா மாளிகையை கேந்திர மையமாக கொண்டு நடைபெறவுள்ளது. இந்த இறுதி நிகழ்விற்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி திருமதி பிந்தியா தேவி பண்டாரி தலைமைதாங்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]