சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில்காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் பொதுமக்களுக்குத் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். மன்னார் பஸார் பகுதியில் நேற்றுக் காலை 10 மணியளலில் ஒன்றுகூடிய உறவினர்களே தங்களால் தயாரிக்கப்பட்ட துண்டுபிரசுரங்களை மன்னார் அரச பஸ் தரிப்பிடப் பகுதியில் வைத்து மக்களுக்கு வழங்கினர்.

வவுனியாவில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசுக்குக் கால நீடிப்பை வழங்காதே, இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணைப்பொறிமுறை வேண்டும், சர்வதேசமே எங்களுக்குத் தீர்வைத் தா. சர்வதேசமே நீதியைப் புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கான விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கால நீடிப்பை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணைப்பொறிமுறையை மேற்கொள்ளுமாறு கோரியும் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]