சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாகவுள்ள இலங்கை : குணதாஸ எச்சரிக்கை

குணதாஸ

நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்திற்கு தாரைவார்த்துக்கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளன தலைவரும் மஹிந்தவின் விஸ்வாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச சொத்துகளை சர்வதேசத்தின் பலமிக்க நாடுகளுக்கு தாரைவார்த்து வருகிறது. முன்னாள் அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம் எமது நாட்டின் மிக சிறந்த சொத்தாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்துள்ள தற்போதைய நல்லாட்சி அரசு மத்தலை விமான நிலையத்தை இந்தியாவுக்கு கூறுப்போட நடவடிக்கையெடுத்து வருகிறது.

அமெரிக்காவும் இலங்கை மீது கழுகுப் பார்வை செலுத்திவரும் சூழலில் அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து சர்வதேசத்தில் பலமிக்க நாடுகளுக்கு இலங்கையின் சொத்துகளை விற்பனை செய்வதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கை அந்நாடுகளின் யுத்தக்களமாக மாறும் என்றார்.