சர்வதேச நீதிமன்றில் இந்தியர் மீண்டும் நீதிபதி! ஐ.நா. சபையில் அடுத்த சுற்று தேர்தல்

சர்வதேச நீதிமன்றில் இந்தியர் மீண்டும் நீதிபதி! ஐ.நா. சபையில் அடுத்த சுற்று தேர்தல்

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றது.

15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த நீதிமன்றில் கடைசி ஒரு வெற்றிடத்துக்கு தற்போது அங்கு நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியும் (வயது 70), இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்டும் (62) போட்டியிடுகின்றனர்.

இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த 2 வாரங்களாக இரண்டு சுற்று தேர்தல்கள் இடம்பெற்றன.

இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது.

ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு பெரும்பான்மை கிடைத்தது.

அங்கு அவருக்கு 9 வாக்குகள் கிடைத்தன. ஆனால் பண்டாரிக்கு 5 வாக்குகளே கிடைத்தன.

சர்வதேச நீதிமன்றத்தின் சட்டதிட்டப்படி ஐ.நா. பொதுச்சபையிலும், பாதுகாப்பு சபையிலும் பெரும்பான்மையை பெறுகிறவர்தான் நீதிபதி பணி இடத்துக்கு தேர்வு பெற முடியும்.

தற்போதைய நிலவரப்படி தல்வீர் பண்டாரியா, கிரீன் உட்டா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலைதான் நீடிக்கிறது.

இந்த நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் கூடுகின்றன.

அன்று 3-வது சுற்று தேர்தல் நடக்கிறது. அன்றும் முடிவு ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

ஒருவேளை அதிலும் முடிவு ஏற்படாவிட்டால் என்ன ஆகும்?

ஐ.நா. பொதுச்சபை நியமிக்கிற 3 பேரும், ஐ.நா. பாதுகாப்பு சபை நியமிக்கிற 3 பேரும் இடம் பெறுகிற கூட்டு அமைப்பு ஒன்று நிறுவப்படும்.

அவர்கள் கலந்துரையாடி அதில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அதுபற்றி இரு சபைகளுக்கும் தெரிவிப்பர்.

ஆனாலும் அப்படி ஒரு நிலை, இன்னும் வரவில்லை என்று ஐ.நா. பொதுச்சபை தலைவரின் செய்தி தொடர்பாளர் பிரேந்தன் வர்மா நியூயார்க்கில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]