சர்வதேச சித்த மருத்துவ ஆய்வு மாநாடு எதிர்வரும் 23ந் திகதி யாழில்

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் ரட்னம் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று (14) முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே கண்காட்சி மற்றும் மாநாடு குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகும், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும், இந்திய ஆயுஸ் அமைச்சும் இணைந்து நடாத்தும் முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடும், கண்காட்சியும் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

யாழ்.கைதடியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ அலகில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சியும் மாநாடும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியின் போது, பயிற்சிப் பட்டறைகளும் இடம்பெறவுள்ளன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பாரம்பரிய சித்த மருத்துவமுறைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சித்த மருத்துவத்தினை ஒரு குடையின் கீழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு இக்கண்காட்சி ஒரு களமாக அமையுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டின் போது, சித்த மருத்துவ மாணவர்களினால் ஆராய்ச்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 205 அதில் 175 ஆய்வுக் கட்டுக்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த 175 ஆய்வுக்கட்டுரைகளையும் அன்றைய நாளில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இக்கண்காட்சி மற்றும், மாநாட்டில், துறைசார் வல்லுனர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், விவசாயிகள், பொது மக்கள் அனைவரையும் பங்கு பற்றி பயன்பெற்றுக்கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.