சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே வித்தியா படுகொலை

சர்வதேசத்துக்கு ஆபாச காணொளி விற்பனை செய்யும் நோக்கிலேயே யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தெரிவித்தார். இந்தப் படுகொலை விசாரணைகளை 7 நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வித்தியா கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் சாட்சியப் பதிவு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமானது.

ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைகள் ஆரம்பமாகின.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உள்ளடங்கிய குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நேற்றைய அமர்வில், பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டை அறிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், இந்த வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் ஊடாக விசாரிக்க முடியாது என குறித்த சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்டமா அதிபர், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்துக்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த வழக்கின் முக்கிய சூத்திரதாரி சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாகப் பதிவு செய்து சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார் எனவும் பதில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அத்துடன் இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்தார் எனவும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் காட்சிகளை இவர் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வழக்கின் ஒன்பது சந்தேகநகபர்களும் வித்தியாவை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி அவர்களே கொலைசெய்துள்ளனர். சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து காட்டுமிராண்டித்தனமாகக் இந்தக் கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதைக் கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கம் இல்லை. வழக்கின் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்கள் உறவினர்கள். அவர்கள் அனைவரும் கூட்டாக வித்தியாவைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. இந்த விடயங்களுக்கான ஆதாரம் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் இருக்கின்றது. விசாரணைகளின்போது அவற்றை சமர்ப்பிக்கவுள்ளேன்” என்றும் பதில் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேசத்துக்கு

அதுதவிர இந்தச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவருக்கு சிறைச்சாலையிலிருந்த சுவிஸ் குமார் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் கொடுப்பதற்கு முயற்சித்தார் எனவும், இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளது எனவும் பதில் சட்ட மா அதிபர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்றுக் கூறினார்.

இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் சிவில் சாட்சியப் பதிவுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகும் எனவும், நிபுணத்துவ சாட்சியப் பதிவுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் உள்ள 9 சந்தேகநபர்களும் நேற்றுப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]