சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது – மனோ கணேசன்

சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது – மனோ கணேசன்.

சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் என இன்று காலை பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவரது பாராளுமன்ற உரையில் முக்கிய பகுதிகள் பின்வருமாறு; மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள். எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இன்று மிகவும் இறங்கி வந்து பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதைவிட அவரால் இறங்க முடியாது. அவரை தயவு செய்து வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பி வைத்து விடாதீர்கள்.

அப்படி அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை  ஆகிய சிங்கள பெரும்பான்மை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிய ஒரு அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான தேவை என்ன? இந்த நாட்டில் வாழும் பிரதான இரண்டு இனங்கள் மத்தியில் ஒருவரை நோக்கி ஒருவருக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. அச்சங்கள் இருக்கின்றன.

சிங்கள மக்களின் அச்சம் என்ன? தமிழர்கள் மீண்டும் தனியொரு ஈழநாட்டை நோக்கி பயணிப்பார்களா என்றும், தம் அரசியல் இலக்கை அடைய ஆயுத போரை ஆரம்பிப்பார்களா என்ற அச்சங்கள் சிங்கள மக்கள் மத்தியில், சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ளன. இவை மிக நியாயமான அச்சங்கள்.

அதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு அச்சங்கள் உள்ளன. ஒன்று, இந்த நாடு முழுக்க முழுக்க சிங்கள பெளத்த நாடாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. அடுத்தது, இந்த நாட்டில் அதிகாரம் பகிர்ந்து வழங்கப்படாமல், தாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் இருக்கின்றது. இவையும் மிகவும் நியாயமான அச்சங்கள். இவற்றை சிங்கள மக்களும், கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு முன் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் கொள்கை அடிப்படையில் அதிகார பகிர்வுக்கு உடன்படுவதாக கூறினார். தேசிய ஐக்கியத்தை விரும்புவதாக கூறினார். இந்த கருத்துகளை நான் வரவேற்கிறேன்.

இன்று இங்கே சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அதுபற்றி நான் ஒன்றை கூறவேண்டும். இலங்கை நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, ஏற்றுகொண்டதன் மூலம், சம்பந்தன் இன்று இலங்கை நாட்டு வியூகத்துக்குள் வந்துவிட்டார். அதன்மூலம், தனிநாடு என்ற வியூகத்தை கைவிட்டு விட்டார். இது சிங்கள மக்களுக்கு இதன்மூலம் அவர் வழங்கியுள்ள நல்ல ஒரு செய்தியாகும்.

இதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேல் இங்கே இல்லாததை சொல்லி நாட்டை குழப்புவதை விட்டுவிட்டு நாம் தேசிய ஐக்கியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]