சட்ட அமைச்சராக பீல்ட் மார்ஷலை நியமிக்குமாறு “புரவெசி பலய” வேண்டுகோள்

சரத் பொன்சேகா

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமித்து முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான “புரவெசி பலய” கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய “புரவெசி பலய” அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, “புரவெசி பலய”அமைப்பை சேர்ந்த தம்பர அமில தேரர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும்.

முன்னைய ஆட்சிக்கால குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவை விட பொருத்தமானவர் வேறு யாருமல்ல. இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள். இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு 6 மாத கால அவகாசத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]