சட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்ட விரோதமாக இரவு வேளையிலும் பகலிலும் ஆற்றுக்குள் உழவு இயந்திரங்களை செலுத்தி மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஆற்றுப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினர் மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புத்தம்புரி ஆற்றுக்குள் உழவு இயந்திரத்தை செலுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் புதன்கிழமை (15) அதிகாலை வேளை விஷேட அதிரடிப்படையினர் கைதுசெய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துயள்ளனர்.

சட்டவிரோத மணல் சட்டவிரோத மணல்

சட்ட விரோதமாக மணல் ஏற்றுவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் கித்துள் மணல் குவாரியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நிலையில் 4 டிப்பர் ரக வாகனம் மற்றும் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக வாகங்கள் (லோடர்) இரண்டினையும் அதிகாலை 5 மணியளவில் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றி கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக கூறினார்;.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]