சட்டவிரோத போதைப்பொருள் கடைகளில் விற்பனை செய்வதற்கு எதிராக கடும் சட்டவடிக்கை எடுக்கப்படும்- நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிப்பு

சட்டவிரோத போதைப்பொருள் கடைகளில் விற்பனை செய்வதற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள்களை யாழ். மாவட்டத்தில் உள்ள பல கடைகளில் விற்பனை செய்வதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அனைத்தும், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக சட்டவிரோத போதைப்பொருள்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும் மீண்டும், போதைப்பொருள் பாவணைகள் அதிகரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சட்டவிரோத போதைப்பொருள் பாவணைகள் மற்றும் விற்பனைகள் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அந்த முறைப்பாட்டின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

அத்துடன், போதைப்பொருள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களது பகுதிகளில் போதைப்பொருள் விற்பனைகள் இடம்பெற்றால், இரகசியமாக மாவட்ட செயலகத்திற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான போதைப்பொருள் விற்பனைக் கட்டுப்படுத்த பொலிஸாருடன் பொது மக்கள் இணைந்து செயற்படுவதற்கான இறுக்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமென்றும் அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைகளைக் கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தராதபட்சத்தில் எதிர்காலத்தில் மிகப்பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென்றும் அவற்றினைத் தடுக்க பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயறபட வேண்டியதுடன், போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் அரச அதிபர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]