சஜித் பிரேமதாசா ஐ.தே.கட்சியின் தலைவராக வேண்டும்- மனோ தெரிவிப்பு??

நண்பர் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக வேண்டும். அப்புறம் நாட்டின் தலைவராக (பிரதமர்/ஜனாதிபதி) வேண்டும் என பலர் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் நாட்டின் எல்லா பிரச்சினைகளும் தீர்வடையும் எனவும் கூறுகிறார்கள்.

இப்படி கூறுபவர்களுக்குள் கணிசமான தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கிறார்கள். இவர்களில் பலர் என்னை நேரடியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கும்படியும் கூறுகிறார்கள்.

நல்லதுதான். சஜித் என் நெருங்கிய நண்பர். அவர் தனது கட்சியின், அப்புறம் நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்பது நல்லதுதான். ஆனால், இப்படி கூறும் நண்பர்களும், ஒருசில ஊடகங்களும் இரண்டு அடிப்படை உண்மைகளை மறந்து விடுகிறார்கள்.

முதல் காரணம், ஐதேக எனது கட்சியல்ல. அந்த கட்சியின் பதவிகளை தீர்மானிக்க எனக்கு அதிகாரம் இல்லை. நேர கால அவகாசமும் இல்லை.

அடுத்தது, முக்கிய ஒரு காரணம்.

சஜித், சஜித்… என்று இப்படி சொல்லிக்கொண்டே இருக்கின்றவர்கள் “தலைவர் அல்லது பிரதமர் பதவியை தனக்கு கொடுங்கள்” என்று சம்பந்தப்பட்ட நண்பர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக இப்போது கேட்பதில்லை என்பதை கவனிக்க மறுக்கிறார்கள்.

ஆகவே சஜித்துக்கு பதவியை கொடுங்கள் என்று பகிரங்க பொதுவெளியில் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், “அந்த பதவியை பகிரங்கமாக கோருங்கள்” என சஜித் பிரேமதாசவிடம் முதலில் கூற வேண்டும்.

நானும், சஜித்தும், ஒருவரை ஒருவர் முதற்பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும் நல்ல நண்பர்கள்.

நான் நேரடியாக அவரிடம், இந்த தலைமை கோஷம் பற்றி பேசி பார்த்து விட்டேன். அவர் “தான் இப்போது பதவியேற்க விரும்பவில்லை. தனது கட்சியும், தலைவரும், ஒருமனதாக தன்னிடம் பதவி ஏற்கும்படி கோரினால் மாத்திரமே, தான் தலைமை பாத்திரம் ஏற்க முடியும்” என தெளிவாக என்னிடம் கூறிவிட்டார்.

உண்மை இப்படி இருக்க, சில ஊடகங்களில், வெளிவரும் செய்திகள் பற்றி எனக்கு தெரியாது. அதைவிட நேரடியாக அவரிடம் தினசரி சந்தித்து கலந்துரையாடும் எனக்கு இதுபற்றி அதிகமாக தெரியும். பொறுப்புடனும் கூற முடியும்.

இந்நிலையில்,என்னை அலாவுதீனாக நினைத்து, அற்புத விளக்கை கொளுத்துங்கள் என்பது போல என்னிடம், “அவரை பதவியில் அமர்த்துங்கள்; எல்லா பிரச்சினைகளும் தீரும்” என அடிக்கடி கூறுபவர்களிடம், “அப்படி என்னிடம் கூறாதீர்கள்” என கூற விரும்புகிறேன்.

சஜித், தலைமை பதவியை ஏற்க தயாராகி, அதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சியாகிய எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை நாளையே கோரினாலும், அதை நாம் பரிசீலிக்கலாம்.

மற்றபடி நான் ஒரு தமிழ் கட்சி தலைவன். இப்போது “தானே தயார் இல்லை” என்று அவரே என்னிடம் சொன்ன பிறகு, நானே வலிந்து அவரிடம் சென்று “நண்பா வா! தலைமையை தா” என மன்றாட முடியாது. அது என் சுயகெளரவத்துக்கு இழுக்கு. நான் அதை செய்ய மாட்டேன். என் “டிசைன்” அப்படி.

(மற்றபடி, பெரும்பான்மை கட்சி ஒன்றின் தலைமை மாற்றம் ஒன்றினால் மாத்திரம் தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு வந்து விடும் என நினைக்க வேண்டாம் எனவும் நான் சொன்னால், பச்சை தமிழர்களுக்கும், மஞ்சள் முஸ்லிம்களுக்கும் கோபம் வந்துவிடும்!! ஹஹா..!)

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]