சச்சின் சாதனையை முறியடித்த கோலி

சேசிங் செய்யும் போது அதிக சதம் அடித்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இந்திய தலைவர் விராட் கோலி தகர்த்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து 206 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரகானே 39 ஓட்டங்களிலும் ஷிகர் தவான் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் தலைவர் விராட் கோலி, நங்கூரம் போல நிலைத்து நின்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். விராட் கோலிக்கு பக்கபலமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 50 ஓட்டங்கள் சேர்த்தார். விராட் கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 111 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 31 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதற்கிடையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும் ரன்குவிக்கும் இயந்திரம் என்றும் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விராட் கோலி, முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். வெற்றி இலக்கை விரட்டும் போது, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர்(17 சதம்) முதலிடத்தில் இருந்து வந்தார். நேற்றைய போட்டியில் விராட் கோலி அடித்த சதம் மூலம் சச்சினின் இந்த சாதனையை முறியடித்து உள்ளார்.

விராட் கோலி தற்போது சேசிங்கில் 18 சதம் அடித்துள்ளார். ஆனால், இதில் ஆச்சர்யப்படத்தக்க அம்சம் என்னவெனில், சச்சின் தெண்டுல்கர் 1% சதங்கள் அடிக்க 232 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், விராட் கோலி வெறும் 102 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை தகர்த்துள்ளார்.

இந்தப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் உள்ளார். 116 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை தில்ஷான் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி நேற்று படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 28 வது சதம் இதுவாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]