க.பொ.த. சா/த பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கடைசி இடங்கள்

க.பொ.த. சா/த பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்று நிர்வாக சேவைகள் அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பரீட்சைத்திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் வட மாகாணம் எட்டாவது இடத்தையும், கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தையும் அடைந்துள்ளமையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களின் கல்வி தொடர்ந்தும் பின்னடைவை கண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

வட மாகாண கல்வியமைச்சராக இருப்பவர் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரும் பிரபல பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியவர் என்பதும் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சராக இருப்பவர் ஓய்வுபெற்ற மாகாண பிரதிக்கல்விச் செயலாளர் என்பதுடன் புகழ் பெற்ற பாடசாலையொன்றின் அதிபராக இருந்து கல்விச்சமூகத்தை வழிநடாத்தியவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் கல்வியமைச்சர்களாக இருப்பவர்களுள் மேற்படி இருவரும் கல்வித்துறையில் மிக நீண்டகாலம் கடமையாற்றியவர்கள் என்பதால் இவ்வாறானவர்கள் தலைமை தாங்கும் மாகாணங்களின் கல்வி பெறுபேறுகள் இவ்வாறு இறுதிநிலைகளை அடைவதென்பது எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

யுத்த காலத்தில் பரீட்சைத்திணைக்கள பொதுப்பரீட்சைகளில் முன்னணி வகித்த இவ்விரு மாகாணங்களும் தற்போது பொதுப்பரீட்சைகளில் பின்னடைவை கண்டுவருவது குறித்து உயர்மட்ட ஆராய்ச்சியொன்றை மேற்கொள்ள வேண்டிய காலத்தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னடைவை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கண்டு வருவதானது யுத்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரீட்சைத்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் மோசடிகள் இடம்பெற்றதா என பெரும்பான்மை கல்வியலாளர்கள் சிந்திக்க வைக்கத் தூண்டியுள்ளது.

இதன் மூலம்தான் அப்போது இம்மாகாணங்கள் முன்னிலை வகித்தன என்ற முடிவுக்கும் அவர்கள் வரக்கூடும்.

வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலும், கல்வியலுவலகங்களிலும் இன்று அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்து விட்டது. தகுதியானவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் பொருத்தமான பதவிகள் மறுக்கப்பட்டு அரசியல்வாதிகளின் கடைக்கண் பார்வை மற்றும் உயர் அதிகாரிகளின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளுக்கு ஆமாம் சாமி போடுபவர்களுக்கும் பதவிகள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பாட ரீதியாக நியமிக்கப்பட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் தமது பாட விடயத்தை கவனிக்காமல் பொது மேற்பார்வையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களும் முன்னோடிக் கற்பித்தலில் இருந்து விலகி மேற்பார்வையில் ஈடுபடுகின்றனர். முறைப்படி நியமிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை பாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களுக்குப் பதிலாக பாட மேற்பார்வை இணைப்பாளர், தற்காலிக உதவிக்கல்விப் பணிப்பாளர் என நாமம் சூட்டப்பட்டு நியமிக்கப்படுகின்றனர்.

வடக்கு. கிழக்கு மாகாணப்பாடசாலைகளில் முறையான மேற்பார்வையில்லை, செய்யப்படும் வெளிவாரி மதிப்பீடு மற்றும் மேற்பார்வை தொடர்பில் பின்னூட்டல்களில்லை. தேசிய பாடசாலைகளில் மத்திய அரசின் கண்காணிப்போ, மாகாண சபைகளின் கண்காணிப்போ, மேற்பார்வையோ இல்லை.

பாடசாலை ஆசிரியர்கள் தேவையற்ற இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன் காரணமாக பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது பரீட்சைப் பெறுபேறுகளில் தாக்கத்தை செலுத்துகிறது.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் பின்னடைவுகள் குறித்து துறைசார் நிபுணர்கள் சுயாதீனமான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென எமது சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]