கோயில் குருக்களின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை 04.06.2018 மாலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 15 வருட காலமாக கொழும்பு -வெள்ளவத்தை ஐஸ்வரி அம்மன் கோவிலில் குருக்களாக கடமையாற்றியவர் என்றும் பின்னர் அங்கிருந்து ஏறாவூர் – மைலம்பாவெளி காமாக்ஷி அம்மன் கோயிலில் இவ்வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 31 வரை குருக்களாக கடமையாற்றியுள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது மனைவியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் திருமணமான இவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவரது சகோதரி ஒருவர் சிறு நீரகம் செயலிழந்த நிலையில் உடல் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அதுபற்றிய மன விரக்தியில் சில காலமாக கவலையுடனும் சோகத்துடனும் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் மேலும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]