கோப்பி பற்றி நீங்கள் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள் சில…

அனைவருமே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியான கோப்பி பற்றி உங்களுக்கு தெரியாத 10 வியக்க வைக்கும் தகவல்களை இதோ..

கோப்பி செர்ரி என்ற பழத்தினுள்ளிருந்துதான் எடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் ஒரு கோப்பி செர்ரி பழத்தை கடித்துப்பார்த்தால் அதனுள்ளே இரண்டு விதைகள் இருக்கும். அதுதான் தட்டையான முகம் கொண்ட பக்கங்களுடன் வளர்ந்து பெரிய கொட்டைகளாக மாறுகிறது.

இரண்டு விதைகளில் ஏதாவதொன்று வளராமல், ஒன்று மட்டும் வளர்ந்தால் அதற்கு பீபெர்ரி என்று பெயர். சாதாரண கோப்பியை விட இந்த பீபெர்ரி கசப்பாக இருக்கும்.

நீங்கள் பல ஆண்டுகாலமாக கோப்பி குடித்து வருபவராக இருக்கலாம். ஆனால், கோப்பியை உண்ணும் வினோத பழக்கம் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சில கோப்பி நிறுவனங்கள் வீணான கோப்பியை கொண்டு மாவை உருவாக்கி அதை பிரட், சாக்லேட், சாஸ் மற்றும் கேக்குகளிலும்கூட பயன்படுத்துகிறார்கள்.

புனுகுப் பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படும் கோப்பிதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்தது ஆகும்.

இந்தோனேசியாவிலுள்ள புனுகுப் பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படும் கோபி லுவாக் என்னும் கோப்பியின் 500 கிராம் 700 டொலர்கள் வரை விற்கப்படுகிறது.

அதாவது, சாதாரண கோப்பி கொட்டைகள் இந்த பூனைகளுக்கு கொடுக்கப்பட்டு அதன் மலம் வழியாக அது வெளியேறும் வரை காத்திருந்து அந்த கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொடி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்திலுள்ள யானைகளால் உண்ணப்பட்டு அதன் மலத்தில் இருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி கோப்பி என்று அழைக்கப்படும் கோப்பி கொட்டைகள் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டொலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்பியில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதில் இருந்து தடுக்கிறது.

இந்தாண்டின் தொடக்கத்தில் சஞ்சிகை ஒன்றில் பதிப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, ஒரு நாளைக்கு மூன்று கோப்பை கோப்பி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

10 ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் 16 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒருவரது ஆற்றலையும், விளையாட்டு திறனையும் உடனடியாக புதுப்பிப்பதற்கு கோப்பி பயன்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒருவித ஊக்கியாக செயல்படும் கோப்பியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தினால் அது உங்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருந்தால் கோப்பியின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், கர்ப்பமாக இருக்கும்போது அதிகளவு கோப்பியை அருந்துவது பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருப்பதற்கோ அல்லது சில சமயங்களில் கருச்சிதைவுக்கோ காரணமாகலாம்.

அதாவது, கர்ப்பமாக உள்ள பெண்கள் ஒருநாளைக்கு இரண்டு கோப்பை கோப்பிக்கு மேல் குடிக்கக்கூடாது என்று பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒன்பதாவது நூற்றாண்டில் எத்தியோப்பியாவை சேர்ந்த கல்டி என்ற ஆடு மேய்ப்பவர், தனது ஆடுகள் வித்தியாசமான மரத்திலுள்ள கொட்டைகளை உண்பதையும், அதன் காரணமாக அவை இரவு முழுவதும் சோர்வடையாமல் கண் விழித்திருந்ததையும் கண்டு ஆச்சர்யமடைந்தார்.

இதுகுறித்து, தனது ஊரிலுள்ள துறவிகளிடம் கல்டி கூறியதாகவும், அதை உணர்ந்த அவர்கள் அக்கொட்டைகளை சூடான பானத்தில் கலந்து குடித்தால் வெகுநேரம் வழிபாடுகளை சோர்வின்றி செய்ய முடியும் என்று எண்ணியதாகவும் நம்பப்படுகிறது.

15 ஆம் நூற்றாண்டில்  கோப்பி ஏமனில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது. கோப்பி ஏமன் மொழியில் ஒயினை குறிக்க பயன்படுத்தப்படும் குவாஹா வார்த்தையால் வழங்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கோப்பி பயிரிடப்பட்டது.

கோப்பி வீடுகளில் மட்டுந்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தால் கோப்பி பிரியர்கள் பலரால் அலுவலகத்தில் வேலையோ, வெளியே பயணமோ செய்ய முடியுமா? வாய்ப்பே இல்லைதானே? ஆம், தற்போது வீதியெங்கும் காணப்படும் கோப்பி கடைகள் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில்தான் தொடங்கப்பட்டன.

கோப்பி கடைகள் ஆரம்பிக்கப்பட்ட வெகு விரைவிலேயே அவை ஊர் கதை பேசும் இடமாகவும், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் இடமாகவும், பாட்டு கேட்கும் பகுதியாகவும் மாறிவிட்டன.

நீங்கள் இந்தியாவில் கோப்பி குடித்தாலும், அமெரிக்காவில் கோப்பி குடித்தாலும் அது ஒரே சுவையாக இருக்கக்கூட வாய்ப்புண்டு. ஏனெனில், “பீன் பெல்ட்” என்று என்று அழைக்கப்படும் மெக்ஸிகோவின் கிழக்குப் பகுதியில் இருந்து பப்புவா நியூகினியா வரையிலான பகுதியில்தான் மிக அதிகளவிலான கோப்பி சாகுபடி செய்யப்படுகிறது.

அதாவது, அதிகபட்சமாக பிரேசிலில் 36 சதவீத கோப்பியும், வியட்நாமில் 18 சதவீதமும், கொலம்பியாவில் 9 சதவீத கோப்பியும் உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதேச கோப்பி கழகத்தின் தரவின்படி, உலகிலேயே பின்லாந்தை சேர்ந்த மக்கள்தான் அதிகளவில் கோப்பி பருகுகின்றனர். அதாவது ஒரு வருடத்திற்கு, பின்லாந்தை சேர்ந்த ஒருவர் சுமார் 12 கிலோ கோப்பியை பருகுகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]