கோட்டாவை உடனே கைதுசெய்ய வேண்டும்

கோட்டாவை உடனே கைதுசெய்ய வேண்டும். பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது என்று அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“ஊழல் மோசடிகள் புரிந்திருந்தால் – கொலைகள் செய்திருந்தால் – நிதி மோசடி செய்திருந்தால் அவ்வானறவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கவேண்டும். அவ்வாறானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்று நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். அந்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் எமக்கு மக்கள் வாக்களித்தனர்.

மக்களின் விருப்பத்தை – அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவதற்கு முற்படுகின்றோம். அந்தவகையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய நிச்சயம் கைதுசெய்யப்பட வேண்டும்; சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

மஹிந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் பொலிஸ் மற்றும் அரசியல் என பலதுறைகளில் உள்ள சிலர் முயற்சி செய்வதை நாம் அறிவோம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.

காணாமல்போனோர் சட்டவரைபுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது. போர்க் காலத்இதில் இன, மத பேதங்களுக்கு அப்பால் அதிகமானவர்கள் காணாமல்போனார்கள். படையினரும் ஆயிரக்கணக்கில் காணாமல்போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்தச் சட்டவரைபு. படையினரைத் தண்டிப்பதற்காக அல்ல.

ஆழிப்பேரலையால் கூட மக்கள் காணாமல்போனார்கள். இந்தச் சட்டவரைபு ஊடாக அவர்களின் உறவினர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். இந்தச் சட்டவரைபினால் படையினருக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது. வெள்ளை வான்களின் மூலம் கடத்தல்களில் ஈடுபட்ட கோட்டாபயவின் ஆள்களுத்தான் இதனால் பயம் ஏற்பட்டுள்ளது” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]