கோட்டாபய ராஜபக்ஷ 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை 9 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னிலையாகியிருந்தார்.

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நிதிமோசடி பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு கடந்தவாரம் நீடிக்கப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 14ஆம் திகதி பிறப்பித்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, குறித்த வழக்கு சட்டவிரோதமானது என, உத்தரவிடுமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த வழக்கானது ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.