கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நாடாளுமன்றில் புதுச்சட்டம்

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டமொன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முற்பகுதியில் குறித்த சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்ட பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாட்டுக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு துறைமுக நகரத் திட்டம் உதவியாக இருக்கும். சுமார் 2 இலட்சம் மக்களுக்கான வாழ்விடமாக புதிய நவீன நகரம் மாறவுள்ளது.துறைமுக நகரத் திட்டம் கொழும்பு மாநகரசபையின் கீழ் கொண்டு வரப்படும்” என்றார்.

அத்துடன், “கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் பொருளாதாரத்துக்கு மீண்டும் உயிர் அளிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலின் கேந்திரமாக மாறும் இலக்கை அடைவதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.