கொழும்பில் 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா

கொழும்பில் 85 ஏக்கரில்

கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது கொழும்பில் காலிமுகத்திடலை ஒட்டியதாக – கடலை நிரப்பி உருவாக்கப்பட்டு வரும், கொழும்பு துறைமுக நகரப் பணிகள் முடிவடைந்ததும், கடற்கரைப் பூங்காவை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை கடந்தவாரம் இணக்கம் தெரிவித்ததாக, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை- கடலை நிரப்பி, 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்கரை புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

உலகத் தரம்வாய்ந்த இந்த செயற்கைக் கடற்கரை, சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

இங்கு ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் வருகை தரும் வகையிலும், 3000 வாகனங்கள் தரித்து நிற்கும் வகையிலும், வசதிகள் செய்யப்படவுள்ளன.

கொள்ளுப்பிட்டி பகுதியில் தற்போதுள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து 80 மீற்றர் வரையிலும், தெஹிவளைப் பகுதியில் 200 மீற்றர் வரையிலும் – கடலுக்குள் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படும் 85 ஏக்கர் நிலப்பரப்பில், 20 ஏக்கர் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் வணிக அபிவிருதிக்காக ஒதுக்கப்படும்.

இதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனம், தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வணிக மற்றும் வதிவிட கட்டுமானங்களை உருவாக்க முடியும். இதற்காக, 30-40 ஆண்டு குத்தகை உடன்பாட்டை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உலகத்தரம் வாய்ந்த கடற்கரையில் நீர்வாழ் உயிரினங்களின் பூங்கா, கடல் விமானங்களை இயக்கும் அலகு, நீர் விளையாட்டுகள், சுழியோடும் வசதிகளையும் கொண்டிருக்கும்.

அதேவேளை, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனமே இந்த திட்டத்தையும் முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]