கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ். தாக்குதல் செய்தி குறித்து விசாரிக்க முடிவு

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலொன்றை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகத்திடம் விசேட தகவல் எதுவுமிருப்பின் அதைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை பிரதமரிடம் நேரடி கேள்வி பதில் சுற்றின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், இது புனையப்பட்ட செய்தியா என்றும், இது தொடர்பில் விசாரணையொன்று நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“உண்மையில் இது தொடர்பில் செய்தி வெளியாகியிருந்ததுடன் (அமெரிக்க) தூதரகமும் அதை நிராகரித்திருந்தது. எனினும், அவர்களிடம் (சம்பந்தப்பட்ட ஊடகத்திடம்) விசேட தகவல் இருந்ததா என்று எமக்குத் தெரியாது. ஆகவே, அவர்களிடம் விசேட தகவல் இருந்தால் அதைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குக் கூறியுள்ளேன்” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]