கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் இன்று தோண்டி எடுப்பு

பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் சடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.

இரசாயண பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஒருவரின் மகளை நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவமொன்று பதுளை ஹாலி-எல பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாய் கருத்து தெரிவிக்கையில்,

எனது இரத்த உறவு முறையிலான உறவினர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி நான் கர்ப்பமடைந்தேன்.

எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் பெயர் டிலானி. எனது குழந்தை எட்டு வயதையடைந்த போது, நான் மறுமணம் செய்துகொண்டேன்.

இந்நிலையில் எனது மகள் ஒன்பது வயதையடைந்த போது, எனது கணவர் மகளை பாலியல் துஷ்பிரயோம் செய்து கொலை செய்துவிட்டார் என்றார்.

ஹாலி – எலை பகுதியின் மாத்தன்னை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் டிலானி என்ற ஒன்பது வயது நிரம்பிய சிறுமியின் மரணம் குறித்து சிறுமியின் தாயும் தாயின் கணவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டபோதே சிறுமியின் தாய் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி (05.01.2018) புதைக்கப்பட்ட ஒன்பது வயது நிரம்பிய சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து சட்டபூர்வ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் சிறுமியின் தாயையும் தாயின் கணவரையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தும்படியும் பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி எச். பி. சி. பீ. கருணாதாச உத்தரவிட்டிருந்தார்.

இவ் உத்தரவிற்கமைய ஹாலி – எல பொலிசார் இறந்த சிறுமியின் தாயையும் தாயின் கணவரையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

டிலானியான சிறுமியின் மரணம் இயற்கை மரணமல்ல, கொலை செய்யப்பட்ட பின்னரே சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருக்கின்றதென்று ஒரு வருடத்தின் பின்னர் சிறிய தாயார் உள்ளிட்ட உறவினர்கள் ஹாலி – எல பொலிஸ் நிலையத்தில் 06.01.2019 இல் முறைப்பாடு செய்திருந்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்தே, பதுளை மஜிஸ்திரேட் நீதிபதி, சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து சட்டபூர்வ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி ஹாலி – எல பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

சிறுமியின் சடலம் மேற்குறிப்பிட்ட குடியிருப்புத் தொகுதியின் வீட்டுத் தோட்டத்திலேயே இரகசியமாக புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடத்தை ஹாலி – எல பொலிசார் சடலம் தோண்டி எடுக்கும் வரை பூரண பாதுகாப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில், வவுனியா செட்டிகுளத்திலிருந்து மாத்தன்னை பெருந்தோட்டத்தில் வாழ்ந்து வந்த பூபாலன் ஜானகி என்ற 28 வயது நிரம்பிய சிறுமியின் தாயும் தாயின் இரண்டாம் தார கணவனான 31 வயது நிரம்பிய மகேந்திரனுமே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]