கொம்மாதுறைப் பிரதேசத்தின் காளி கோயில் உண்டியலை திருடிய 18வயது இளைஞன் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உள்புற உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனை தாம் துரிதமாக செயற்பட்டு சில மணி நேரங்களுக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்மாதுறை கிராமத்தில் உள்ள மேற்படி காளி கோயிலின் உட்புறத்தில் பாதுகாப்பாக பொருத்தி வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுப் போயிருந்ததாக கோயில் நிருவாகத்தினர் பொலிஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி முறைப்பாடு அளிக்கப்பட்டவுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ‪;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷ‪ன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.

அதன்படி தாங்கள் விரைந்து விசாரணை மேற்கொண்டபோது கொம்மாதுறை 10ஆம் கட்டை புகையிரதப் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது இளைஞன் கைது இளைஞனை திங்கட்கிழமை அதிகாலை 12.03.2018 கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்பிடும்போது, இந்தக் கிராமத்தில் வெளியார் எவரேனும் வந்து தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் தாங்கள் விசாரணைகளைத் துவங்கியபோது மேற்படி இளைஞன் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி இளைஞனையும், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் அந்த உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உண்டியலில் ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயக் குற்றிகளும், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயத் தாள்களும் உள்ளடங்கியிருந்தன.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் பணத்தையும் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]