கொட்டகலை பகுதியில் பிறந்து 28 நாட்களான சிசுவுக்கு எமனான தாய்

பிறந்து 28 நாட்களான சிசுவுக்கு தொண்டைப் பகுதியில் பால் இருகியதாகக் கூறி குறித்த சிசுவை உயிருடன் புதைத்துக் கொலை செய்த தாய் மற்றும் தாயின் தாய் ஆகிய இருவரை சந்தேகத்தின் பெயரில் ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன், கொட்டகலை பில்ட் தோட்டப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிசு காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து ஹட்டன் பொலிஸார் குறித்த சிசு புதைக்கப்பட்ட இடத்தை இனங்கண்டனர்.

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த சிசுவை உயிருடன் அவர்கள் புதைத்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திவ்யநாதன் வெண்ணிலா என்ற சிசுவே சடலமாக மீட்கபட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது.

சிசுவின் தந்தை கண்டியில் தொழில் செய்து வருகின்றார் எனவும், அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர்களான இரு பெண்களையும் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையைக் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் ​மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]