கொடிகள் ஏற்றாமைக்கு வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் கண்டனம்.

இலங்கையின் தேசிய கொடி, எமது மாகாணசபைக் கொடி, பாடசாலைக் கொடி இந்த மூன்றினையும் ஏற்றாது நிகழ்வினை ஆரம்பித்தமை தமக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் புதிய அதிபர் விடுதி திறப்புவிழா இன்று (21.11.2017) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கலந்து கொண்டதுடன். கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து, எம்.கே.சிவாஜிலிங்கம், தர்மலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு புதிய கட்டிடம் திறக்கப்பட்டபோதும் ஏன் பாடசாலை கொடி, மாகாணசபைக் கொடி தேசிய கொடி என்பனவற்றினை கம்பங்களில் பறக்கவிடவில்லை. அதற்கான காரணம்தான் என்ன என்று அகிலதாஸ் சிவக்கொழுந்து கேள்வி எழுப்பினார். ஏதோ ஒரு காரணம் இல்லாமல் அப்படி நடந்திருக்க முடியாது. இது மிகவும் தவறான விடயம் என்று தெரிவித்தார்.

வடமாகாணசபை நிறுவப்பட்டு மூன்று அரை ஆண்டுகள் கடந்துள்ளபோதும் வட மாகாணப் பாடசாலைகளில் ஐந்து வீதமான பாடசாலைகளில் இன்னமும் மாகாணசபைக் கொடி இல்லாது காணப்படுவது என்னத்தை வெளிப்படுத்துகின்றது. என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். போராடி பெற்றுக் கொண்ட எமது மாகாணசபை அரசின் கொடி கூட பல பாடசாலைகளில் பறக்கவிடுவதில்லை என குற்றம் சுமத்தினார்.

இந்த பாடசாலையின் பான்ட் வாத்திய மாணவர்கள் வரும்போது நான் அவதானித்திருந்தேன் அவர்களின் பாதணிகள் மற்றும் சீருடை என்பன மிகவும் பழுதடைந்து காணப்பட்டதனை கண்டுகொண்டேன். அவர்களுக்கான சீருடைகளையும் பாதணிகளையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் என்னால் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதனை நான் நிறைவேற்றுவேன்.