முகப்பு News India கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க வட்டியில்லா கடன்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க வட்டியில்லா கடன்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகளை புனரமைக்க 1 லட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படுமென கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பிரதேசங்களை நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட அவர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டுள்ளதோடு, வெள்ளம் நிரம்பிய காரணத்தாலும், மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு தற்போது மழை நின்று விட்டதால், மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்மூலம் 60,593 வீடுகள் மற்றும் 37,626 கிணறுகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 துணைமின் நிலையங்களில் 41 நிலையங்கள் செயற்பட தொடங்கியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதான நிலைவரப்படி 2,774 முகாம்களில் 10,40,688 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் பெரும்பாலும் பாடசாலை மற்றும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

எனவே ஓணம் விடுமுறையை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வேறு அரங்குகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கிடைப்பதாக அவர்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தங்கள் வீடுகள் குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர். அவற்றை திருத்திக் கொடுப்போம்.

மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக, பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இதற்கான வட்டியை அரசே செலுத்தும். மேலும் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com