கேரளாவுக்கு 700 கோடி நிதி வழங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

கேரளாவுக்கு 700 கோடி நிதி உதவியை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்வந்துள்ளது.

இந்த தகவலை கேரள அரசு தெரிவித்துள்ளதோடு, இந்த தொகையானது 700 கோடி இந்திய ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கேரள நிலவரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், இன்று (செவ்வாய்க்கிழைமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கடுமழையினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 2000 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்தது.

இருப்பினும் 500 கோடி இந்திய ரூபாவை மாத்திரமே மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில் ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ 700 கோடி இந்திய ரூபாவை நிதியாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சிறப்பு சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளோம். குறித்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில் கேரள வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் மற்றும் நிவாரணங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி இந்திய ரூபாவை நிதியாக வழங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 600 கோடி மாத்திரம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மேக்தும் கேரள வெள்ளம் குறித்து பகிர்ந்த ட்விட்டர் பதிவில்,  `ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு கேரள மக்களின் பங்கு அதிகம். தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவுக்கு சிறப்பு உதவி செய்வது மிக அவசியம்’ என குறிப்பிட்டிருந்தார்.

கேரளாவுக்காக ஐக்கிய அரபு எமிரேட் அரசு மட்டுமன்றி  அங்கு வசிக்கும் தொழிலதிபர்களும் தொடர்ந்து நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.  #UAEStandsWithKerala  என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட் வாழ் இந்தியர்களுக்கு கேரள மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் கடந்த ஒரு வார காலமாக நீடிக்கும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதிகமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]