கூட்டமைப்பின் ஐக்கியத்தினை வலுவிழக்கச் செய்வது மக்கள் ஆணையினை மீறுவதாகும் – விந்தன் கனகரத்தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமானது. அது எந்தவகையிலும் பிளவுபட்டுப் போகக்கூடாது என்பதில் நாம் உறுதியாகப் பணியாற்ற வேண்டிய சவால் எம் முன் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

புங்குடுதீடு மக்கள் ஒன்றியத்தின் அழைப்பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த சமயம், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் பிரச்சினைகள் இருக்கின்றன. அப் பிரச்சினைகளை சிக்கல் நிலைமைக்குக் கொண்டு செல்லாது பேசித் தீர்ப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வெற்றிகளுக்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக அது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தினை ஜனநாயக வழிமுறைகளுக்குள்ளாகவும் விழுமியங்களுக்குள்ளாகவும் மேற்கொண்டு விடுதலைக்கு வலுச்சேர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.

ஆயுதப்போராட்டம் வலுவிழந்த பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது ஆணையினை பல சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ளனர். அச்சுறுத்தல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக வாக்களித்துள்ளனர். மக்கள் தம்மிடம் நிலவும் அக வேற்றுமைகள் எல்லாவற்றினையும் புறந்தள்ளிவிட்டு தமது விடுதலைக்காக ஒரு குடையின் கீழ் செயற்படத்தக்க அரசியல் அங்கீகாரத்தினையே கூட்டமைப்பிற்கு வழங்கினர்.

இவ்வாறு மக்கள் அளித்த ஆணை நமக்கும் சில படிப்பினைகளை வழங்குகின்றது. நமக்குள் பலதரப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவற்றினை கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் வகையான அணுகுமுறைகளை அணுகித் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் அப் படிப்பினைகளில் ஒன்றாகும்.

முரண்பாடுகள் கருத்து வேற்றுமைகள், அரசியல் தீர்வினை அணுகுவதில் மென்போக்கு, வன்போக்கு உத்திகள் கூட்டமைப்பிற்குள் காணப்படலாம். நாம் வேவ்வேறு தளங்களில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் என்ற வகையில் நமக்குள் அணுகுமுறைகளில் சிந்தனைகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது மறுக்க முடியாததாகும். அவ்வாறு காணப்படும் கருத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மோதல் நிலைக்குச் செல்லாது கூட்டமைப்பினுள் அக ரீதியிலான ஜனநாயக போக்குகளை உத்திகளுடன் மேம்படுத்துவதன் வாயிலாக தீர்ப்பதற்கு நாம் விளைவோம் ஆயின் வரவேற்கத்தக்கது.

நமது அணுகுமுறைகள் கூட்டமைப்பினை பிளவு படுத்துவதாக அமையக் கூடாது. அடிப்படையில் கூட்டமைப்பிற்கு வெளியில் நிற்கும் நியாயபூர்வமான சக்திகளையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதாக கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்டால் அது மக்களின் அரசியல் எதிர்பார்ப்பினை சிதறடிக்காது மேலும் முன்னோக்கிச் செல்ல முடியும்.

குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துவதில் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் மக்களுக்கும் பெரும் பொறுப்புள்ளது. நீங்கள் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இறுக்கமான கட்டமைப்பாகப் பேணுவதில் செல்வாக்குச் செலுத்தவேண்டும். தாயாகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் ஏகோபித்த தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் வாயிலாக தமிழ் மக்களின் தலைமைத்துவங்கள் சிதறிப்போகாது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியும். ஏற்கனவே தாயகத்தில் இருக்கின்ற மக்களுக்கு அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நீங்கள் நல்கும் ஒத்துழைப்பு பாரியது என்பதை என்றும் நினைவில் கொள்கின்றோம்.

இந்த இடத்தில் நான் பெரிது நீ பெரிது எனக் கொள்ளாது நாடு பெரிது என்ற மகோன்னத தத்துவத்தினை நாம் நினைவுறுத்த வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன மறுக்கமுடியாத நிராகரிக்க முடியாத கோரிக்கைகளாகும். அக் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்கு எம்மிடையான ஐக்கியம் இனிறியமையாதது என்பதையும் நாம் மறந்துவடக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

இக் கூட்டங்களில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துடன் இணைந்து ரெலோவின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் நித்தி, ஜேர்மன் கிளை அமைப்பாளர் ரஞ்சித் உட்பட ரெலோவின் சர்வதேசக்கிளைகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]