கூடு விட்டுக் கூடு பாய்தல் பகுதி 1 

தொடர்ச்சி…

ரகாயப் பிரவேசம் சித்தர்கள் எமக்களித்த அற்புதக் கலையாகும். தேகம் விட்டுத் தேகம் புகும் கலை பார்ப்பதற்கு மந்திர வித்தையாட்டம் தோன்றினாலும், உண்மையில் அஃது அவ்வாறன்று. பல வருட கால முயற்சியின், அனுபவத்தின், தவத்தின் பேறே இக்கலை எனலாம்.

பரகாயப் பிரவேசம் செய்தல் என்பது பழைய காலம். இக்காலத்தில் இதெல்லாம் கட்டுக்கதை. கண்கட்டி வித்தை என்பது இயலாமொழி. பஞ்ச பூதங்களை ஆளுமை செய்பவனால் எக்காலத்திலும் சரீரம் விட்டு சரீரம் புக முடியும். அது பழைய காலம் இது கலிகாலம் எனக் காலத்தின் மீது நாம் பழி போட்டால் சித்திகள் எல்லாம் எம் கைக்குக் கிட்டாமலே போய்விடும்.

திருமூலர் கூடுவிட்டுக் கூடு பாயும் காட்சி
திருமூலர் கூடுவிட்டுக் கூடு பாயும் காட்சி

பதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் (3:38சுலோகம்) பரகாயப் பிரவேசத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.  “பந்த காரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேத நாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச” என்கிறார் பதஞ்சலி. சித்திகளின் பந்த காரணம் தளர்வடைகையில் யோகி தன்உடலில் நாடிகளில் சம்யமம் செய்து வேறொரு உடலில் நுழைகிறான் என்பதே இதன் விளக்கம். ஒவ்வொரு ஜீவனும் தர்ம அதர்மத்திற்கு ஏற்ப ஒரு உடம்பில் கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம். இந்தக் கட்டு தளர்ந்து போனால் பந்தம் விட்டொழிகிறது. பந்தத்தை விட நாடிகளில் சம்யமம் செய்ய சித்தத்தின் (சித்தம் என்பது மனமும் புத்தியும் ஒன்றிணைந்த அம்சமாகும்) சஞ்சார ஸ்தானம் பற்றிய அறிவு பயன்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் (இங்கு முழு ஆத்மா/ ஒன்றிணைந்த நிலை) வேறு உடலிலும் பிரவேசிக்கலாம். இப்பிரவேசத்தின் போது சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன், இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே பிரவேசிக்கும்.

இதுவே பர ஸரீர ஆவேசம் எனும் உடலை விட்டு உடல் பாயும் சித்தி ஆகும். சரீரம் விட்டுச் சரீரம் பாய்தல்… பண்டைய காலத்தில் முனிவர்களும் சித்த புருடர்களும் பழக்கத்தில் வைத்திருந்த ஒரு சித்தி (கலை). இது ஒருவர் அவருடைய விருப்பத்தின் பேரில், அவருடைய உயிரை அப்போது நிலைகொண்டிருக்கும் உடலிலிருந்து நீக்கி, வேறொரு உயிர் போன உடலில் செலுத்திக் கொண்டு வாழ்வதாகும். அவ்வாறு விருப்பப்படி உயிர் நீத்த உடலைப் பாதுகாத்து, வேண்டும்போது புதியதாக புகுந்த உடலை விட்டு மீண்டும் இயல்பான தன் பழைய உடலில் புகுந்து கொள்ளமுடியும். இதையே பரகாய பிரவேசம் என்பர்.

உடல் விட்டு உடல் தாண்ட முன்…

ரகாயப் பிரவேசம் செய்யும் முன்பு மேல்வரும் விடயங்களில் தெளிதல் முறையாகும்.

 • தன் உடலைப் பற்றிய ஞானம் அவசியம். இயல்பு தத்துவம் தெளிவாகத் தெரிந்திருத்தல் வேண்டும்.
 • சரீர தத்துவங்கள் 96 குறித்து அறிந்திருக்க வேண்டும். சித்தர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.
 • அண்டத்திலுள்ளதே (உலகத்தில் உள்ளதே) பிண்டத்திலும் (உடலிலும்) உண்டு என்பதைத்
 • தெளிய வேண்டும். உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அவ்வாறே மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அறிய வேண்டும்.
 • பஞ்ச பூதங்களைத் தம் ஆளுகைக்குள் வைக்க அறிய வேண்டும்.
 • தமது தேகத்தைப் பாதுகாக்க அறிய வேண்டும்.
 • ஸ்தூல உடல் வேறு ஜீவன் வேறு என்பதை உணர வேண்டும். பூதவுடலை விடுத்து வேறான நான்கு உடல்கள் உள்ளன என்பதைத் தெளிதல் வேண்டும்.
 • உடல் தொடர்பை அறுக்க உடலில் இருந்துகொண்டே தெரிந்திருக்க வேண்டும்.குண்டலினி சக்தியைக் கையாளத் தெரிதல்.
 • வர்ம நாடி தத்துவம் அறிதல் வேண்டும்.
 • தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் கூடிய நிலையை அடைய வேண்டும். இதுவே சம்யமம்.
 • கூடுவிடா நிலையில் நன்கு தேர்ச்சி பெறல் வேண்டும்.
 • இறுதியாகத் தேகம் விட்டுச் சென்ற பின்னர், தமது உடலுள் மீளவும் வர அறிந்திருத்தல் வேண்டும்.

கூடுவிட்டுக் கூடு பாயும் கலை என்பது ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வும் அல்ல. ஒரு தனிப்பட்ட பயிற்சியும் அல்ல. சித்திகள் அனைத்திலும் பண்பட்ட நிலையில் தான் இக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை வாய்க்கும். இக்கலையை அடைய பல நிலைகளைத் தாண்டி வர வேண்டும்.

சரீரம் விட்டுச் சரீரம் நுழைதல்…

ரகாயப் பிரவேசம் சித்திகளில் தலையாய சித்தியாகும். உடல் விட்டு உடல் தாவும் யோகி ஒருவன்,“சித்தத்தின் தொடர்புக் காரணம் தளர்ந்த பின், தன் உடலில் நாடிகளில் சம்யமம் (சம்யமம் என்பது குறிப்பிட்ட பொருளோடு ஒன்றிக் கலந்து உயிர்க் கலப்பு பெறல் ஆகும். இது ஒரு மேல் நிலைப் பயிற்சி) செய்து வேறு ஒரு உடலினுள் நுழைகிறான்” சித்தம் பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளதை அறிவதால் இது சாத்தியமாகிறது.

பரகாயப் பிரவேசம் செய்ய, உடலிலுள்ள அத்தனை நாடிகளுள்ளும் ஓடும் பிராணனை இதய சூட்சுமணா நாடிக்குள் ஒன்று கூட்ட வேண்டும். இதற்கு நாடி சம்யமம் உதவுகிறது. அதன் பின், இந்த குறிப்பிட்ட நாடி வழியே உடலை விட்டு வெளியே சென்று, எந்த உடலில் உட்புக வேண்டுமோ அந்த உடலின் குறிப்பிட்ட நாடியை சம்யமம் செய்து அதன் மூலம் உட்புக வேண்டும்.(தகவலுக்கு மட்டும் தயவு செய்து முயற்சித்துப் பார்க்க வேண்டாம்).

Kundalini Awakening
Kundalini Awakening

மேலும், குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தை நோக்கிச் செலுத்தும் முறையை அறிந்து செயற்படுத்தல் வேண்டும். பின், தனிமையான இடத்தில் அமைதியாக சித்தாசனம் அல்லது பத்மாசனம் இட்டு அமர்ந்து நன்றாக இரண்டு நாசித்துவாரங்கள் மூலம் சுவாசிக்க வேண்டும். அதன் பின், குதத்தை உள்நோக்கி இழுத்தல், வயிற்றை முதுகுப்புறம் மேல்நோக்கி எழச் செய்தல் வேண்டும். பிறகு, மூலாதாரக் குண்டலினியை பிறப்பு உறுப்பு நுனியிலிருந்து மேலேற்ற வேண்டும். பின், மனதை மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரராமாகிய மூளை மையம் வரை செலுத்த வேண்டும். பின்பு மெல்ல மூச்சை வெளியேற்றி பந்தங்களை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து தேகம் விட்டு தேகம் தாண்டும் போது, மனித உடல்தான் தேவை என்று இல்லை. எறும்பு முதல் யானை வரையுள்ள சிறிய, பெரிய உயிரினங்கள் அனைத்துள்ளும் புக இயலும். ஆனால் அவ்வுடல் குறை உடலாகவன்றி நிறை உடலாக இருப்பது அவசியம்.

பரகாயப் பிரவேசம் செய்த பின், ஸ்தூல உடலுக்கும் சூக்கும உடலுக்கும் இடையில்ஒரு தொடர்பு பேணப்படும். ஸ்தூல உடல் அதிர்வுகளை சூக்கும உடலில் உணரலாம். இவ்வாறு இருக்கும் போதே மீண்டும் தம் உடலோடு இணைதல் முடியும். இந்நுட்பத் தொடர்பு அறுந்து போனால் மீள இணைதல் முடியாது. பூத உடலுக்கும் நுட்ப சரீரத்துக்கும் இடையில் இருக்கும் நுட்பத் தொடர்பை “வெள்ளிக் கொடி”என்கின்றனர்.

பரகாயப் பிரவேசம்
பரகாயப் பிரவேசம்

ஆரம்பத்தில் இக்கலையை முயல்பவன், நினைத்த உடலில் செல்ல முடியாது. செல்லவும் கூடாது. படிப்படியாகவே செல்ல வேண்டும். முதலில் எறும்பு. பின் தேனி. பின் வண்டு. பின் பழம் மட்டும் உண்ணும் பறவைகள். இவ்வாறே முறையாகச் செல்ல வேண்டும். ஆனால் நாயின் உடலினுள்ளே செல்லல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கிடையாகப் படுத்துக் கிடந்தே முயல வேண்டும். முதிர்ச்சி பெற்ற பின் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். பரகாயப் பிரவேசம் என்பது ஒரு கணம் பொழுதில் நிகழும்.

இப்பரகாயப் பிரவேசக் கலையை நமது சித்தர்கள் இலாவகமாகச் செய்துள்ளனர். ஆனாலும் அவை சுய இலாபத்துக்காக அன்றி பொது நலம் நோக்கியதாகவே உள்ளன. திருமூலர், போகர், புலிப்பாணி, அருணகிரிநாதர், பட்டினத்தார் என பலர் பரகாயப் பிரவேசம் செய்துள்ளமையை அவர்கள் வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.

சித்தர் பெருமக்களிடையே வழங்கி வந்த அற்புதக் கலையான கூடு விட்டுக் கூடு பாயும் கலை இன்று இல்லாமலே போய் விட்டது. சில பேரின் தகாத போக்கு காரணமாக இவ்வாறான அரிய கலைகள் மாயா ஜாலம், கண்கட்டி வித்தை, மந்திரம், மாயம் என வெறுத்து ஒதுக்கப்பட்டு விட்டன. காலம் செய்த கோலத்தின் விளைவால் வந்த வினைகள் தமிழர் தம் அரிய கலைகளைக் குழி தோண்டிப் புதைத்துள்ளமை மிக வருந்தத்தக்கதே. ஆனாலும் சித்தர் நூல்களை முறைப்படி ஆராய்ந்து தெளிவுறும் போது இவை உலக வெளிச்சத்துக்கு வரும் என்பது திண்ணம்.

(இத்துடன் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை பற்றிய தகவல்களை முடித்துக் கொள்கிறேன். சித்தர் அருள் கூடி, இது தொடர்பான தகவல்கள் கிட்டும் போது மீண்டும் தொடகிறேன். நன்றி! )

தொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர் . த.கி.ஷர்மிதன்.

கூடு விட்டுக் கூடு பாய்தல் பகுதி 1