“பரகாயப் பிரவேசம்” சித்தர்களின் விந்தை மிக்கக் கலை : “கூடுவிட்டுக் கூடுபாய்தல்”

– ஒரு பார்வை –

எம்முன்னோர்கள் அறிவியலையே வாழ்வியலாகக் கொண்டவர்கள். ஒவ்வொரு செயலும் காரணமும் அர்த்தபுஷ்டியும் உள்ளது என்றால் மிகையல்ல. தம் இக வாழ்வை இழந்து, பர வாழ்வுக்கான வழியைத் தேடி, தெளிந்து உணர்ந்து, அதை மானிட குல நன்மைக்காக அளித்தவர்கள் சித்தர்கள். தற்கால விஞ்ஞானம் கற்பனை செய்யாத விடயங்களையும் தமது ஞானத்தால் எளிமையாகவே செய்து காட்டியவர்கள் சித்தர்கள்.

சித்தர்
சித்தர்

தற்கால அறிவியலால் எண்ணிக்கூடப் பார்க்க முடியாத விடயங்களை அசால்டாக(மிகச் சாதாரணமாக) செய்து காட்டியவர்கள் சித்தர்கள். பொருள்முதல் வாத தளத்தில் நின்று, கண்ணால் காண்பவற்றை மாத்திரம் ஆதாரமாகக் கொணர்ந்து பல விந்தைகள் புரியும் தற்கால விஞ்ஞானத்தை விஞ்சி, ஒருபடி மேலே சென்று, கண்ணுக்குப் புலனாகாதவற்றையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பல அரிய விந்தைகளைச் செய்தவர்கள் சித்தர்கள் எனலாம்.

தற்கால அறிவியலால் மரணத்தை வெல்ல இன்னமும் இயலவில்லை. உயிரைத்தக்க வைக்க எவ்வளவோ போராட்டம். ஆனால் சித்தர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னமே உயிரை தம்வசப்படுத்தி சாகா நிலை பெற்றமை சிறப்பாகக் குறிப்பிடற்குரியது. சித்தர்கள் சாகாக் கலை வல்லவர்கள் என்றால் சாலப் பொருந்தும்.

மேலைநாட்டினரின் கலாசாரத்தையும் கண்டுபிடிப்புக்களையும் சாலச் சிறந்தது என மெச்சி, மேலும் மேலும் உயர்த்திப் பிடிக்கும் நம்மவர்கள், நமது கலாசாரத்தையும் அறிவியலையும் ஞானத்தையும் இழந்து கொண்டிருக்கும் தற்கால சூழலில், எமது பண்பாடுகளையும் தனித்துவமான அம்சங்களையும் அடையாளப்படுத்த வேண்டியதும் நமது சந்ததியினருக்குக் கையளிக்க வேண்டியதும் பெரியயோரினதும் படித்த மேதைகளினதும் கடனாகிறது என்பது நினைவில் வைக்க வேண்டியது .

நமது கலாசார பாரம்பரியங்களைச் சிறந்தது என்றும் பயனுள்ளது என்றும் கருதவோ பேணவோ நம்மவர்களுக்கு நாதியில்லை. மேலை நாட்டினர் அறிவியலையும் விஞ்சும் அற்புதப் பொக்கிசங்கள் எம்மிடம் உண்டு. ஆனாலும் அதை ஏற்றுப் பேண எமக்குத் திராணியில்லாமல் போனது வருந்தத்தக்கது.

போனது போகட்டும், இனி வரும் காலமாவது எமது பண்பாடுகள் பேணப்படட்டும் எனக் கூறிக் கொண்டு, விடயத்தினுள் நுழைவோம். இன்றை நவீன அறிவியலுக்குச் சவால் விடும் சித்தர்பெருமக்களின் அற்புதக் கலையான, ‘கூடுவிட்டுக் கூடுபாய்தல்’ எனும் பரகாயப் பிரவேசம் பற்றிய ஓர் கண்ணோட்டமாகவே இக்கட்டுரை அமைகிறது.

பரகாயப் பிரவேசம் – சொற் பொருள் விளக்கம்.

ஒரு உடலில் இருந்து மற்றுமொரு உடலுக்குத் தாவும் கலையை வடமொழியில், ‘பரகாயப் பிரவேசம்’ எனவும் தமிழில், ‘கூடுவிட்டுக் கூடுபாய்தல்’ எனவும் வழங்குகின்றனர். ஆயகலைகள் அறுபத்தினான்கினுள் 52 ஆவது கலையாக இஃது குறிப்பிடப்படுகின்றது.

பரகாயப் பிரவேசம் என்பதற்குத் தமிழில், “ஒரு உடலில் இருந்து மற்றுமொரு உடலினுள் நுழைதல்” என எளிமையாகப் பொருள் கொள்ள முடியும். பர = பிற, காயம் = உடல், பிரவேசம் = நுழைதல் (பர + காயம் + பிரவேசம் = பிற உடலினுள் நுழைதல்) எனலாம்.

கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனும் தமிழ் வழக்கும் இப்பொருளிலேயே வழங்கப்படுகிறது. கூடு என்பது உடலைக் குறிக்கும். விடுதல், பாய்தல் என்பன, ஒன்றை விட்டு மற்றுமொன்றினுள் செல்லல் எனும் பொருளில் வரும். இதன்படி, “ஒரு உடம்பை விடுத்து மற்றுமொரு உடம்பினுள் செல்லுதல்” எனப் பொருள் கூறலாம்.

(கூடு = முன்னமே உயிர் வாசம் செய்யும் உடல், விடுதல் = உயிரானது தான் வாசம் செய்யும் உடம்மை விடல், கூடு = மற்றுமொரு உடல் / வேறு உடல், பாய்தல் = தாவுதல்/ உட்செல்லல்)

கூடுவிட்டுக் கூடுபாய்தல்என்பதனை, “ஒரு உடலை விட்டு இன்னுமொரு உடலினுள் உட்செல்லல் / ஆத்மாவை ஒரு உடலில் இருந்து இன்னுமொரு உடலுக்குள் உட்செலுத்தல்” எனக் கருத முடியும். ஆனாலும் கூடுவிட்டுக் கூடுபாயும் கலை என்பது வெறுமனே ஒரு உடலில் இருந்து மற்றுமொரு உடலினுள் நுழைதல் என்பதோடு மட்டும் இன்றுவிடும் ஒன்றல்ல.

கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை

கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்பது சித்திகளில் மேலான சித்தியாகும். 64 கலைகளுள் ஒன்றாக விளங்கும் இஃது, சித்தர் பெருமக்களால் சிறப்பாகப் பேணப்பட்ட ஒன்றுமாகும். குருபரம்பரை வழி கடத்தப்பட்டு வந்த இக்கலையை மக்கள் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் உலகுக்கு எடுத்துரைத்தவர் போகர் ஆவார். சித்திகளில் மேலாகக் கருதப்படும் பரகாயப் பிரவேசம் அட்டமா சித்துகளில் ஆறாவதாகக் கொள்ளப்படுகிறது. இதனைப் “பிரகாமியம்” (தன்னுடைய உடம்பில் உறையும் உயிரையும் ஆத்மாவையும் எடுத்து வேறொரு உடம்பில் சொருகி விடுதல் ) எனச் சுட்டுகின்றனர் .

ஆய கலைகள் அறுபத்து நான்கு
ஆய கலைகள் அறுபத்து நான்கு

உயிர் உடலைச் சேர்வதும், சேர்ந்த உடலை விட்டு நீங்குவதும் மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அவ்வாறு இருக்கையில், நினைத்த பொழுதில் தனது உடலை விட்டகன்று வேறொரு உடலில் இணைவது என்பது கற்பனைக்கு எட்டா ஒன்று. யதார்த்தத்தில் இது சாத்தியமற்ற ஒன்று என்கிறது நவீன அறிவியல்.

நவீன அறிவியல் மறுத்தொதுக்கும் பரகாயப் பிரவேசக் கலையை நமது முன்னோர்கள் சாதித்திருக்கின்றார்கள். ஒருவர் அல்ல இருவர் அல்ல பலர் (திருமூலர், போகர், புலிப்பாணி, கொங்காணர்…) இதனைச் சாத்தியப்படுத்தி இருப்பது நாம்மார்தட்டிக் கொள்ளும் விடயமல்லவா???. சித்தர் பாடல்களில் இக்கலை பற்றிய விடயங்கள் விரவிக்கிடக்கின்றன. அதுபற்றிய சில அடிப்படைகளை மாத்திரம் அறியப் பண்ணுவதே இத்தொகுப்பின் நோக்கம்.

கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்பதை ஒரு கலை என்ற சிறிய வளையத்துள் அடைத்துவிடல் பொருந்தாது. கலை முறையான பயிற்சியால் கைக்குள் வந்து அடங்கும். ஆனால் சித்தி என்பது வாய்க்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே கிட்டும்.

இதற்குப் படைத்தவன் அருள் வேண்டும். இத்தகு சித்தியை எய்தவர்களே சித்தர்கள். தேகம் விட்டு தேகம் பாய தேக தத்துவம் அறிந்திருத்தல் மிக அவசியமானது. நமது தேகம் பற்றிய முழுமையான தெளிந்த அறிவு இருந்தாலே நமது

ஜீவசக்தியை நம்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும். இவ்வாறல்லாத மாத்திரத்தில் இது சாத்தியமற்றதாகிவிடும். பரகாயப் பிரவேசம் என்பதை ஒரு மந்திர வித்தை எனச் சுட்டுதல் முறையன்று. மந்திர வித்தை போல் இது தோன்றினாலும், அதில் ஊழிக் காலம் முதல் சித்தர்கள் பெற்ற அனுபவங்களின் தொடர் ஆதார ஊற்றாக அமைந்திருக்கிறன.

சித்தர்கள் மனித உடலைப் பிரதானமாக, தூல உடல் (கண்ணுக்குப் புலனாகும் என்பு தோல் தசை போன்றன கொண்ட தேகம்), சூக்கும உடல் (கண்ணுக்குப் புலனாகா வடிவம்/ உணர்வு மயமானது) என இருவகையாகக் குறிப்பிடுகின்றனர். தனித்துவமான பயிற்சிகள் வாயிலாக இந்த இரு உடல்களையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து மீண்டும் இணைய வைக்க முடியுமாம். இந்தப் பயிற்சி இரண்டு நிலைப்படும். ஒன்று “கூடுவிடா நிலை” மற்றையது “கூடுவிட்டுக் கூடுபாய்தல்” ஆகும்.

கூடுவிடா நிலை ( உடம்போடு கூடி இருத்தல்)என்பது இறந்தும்இறக்காமல் இருத்தல் என்கின்றனர் சித்தர்கள். நமது உடலை நாமே இறந்தது போன்ற சலனமற்ற நிலைக்குக் கொண்டு வருதல் இதுவாகும். இந்நிலையில் உயிர் உடம்போடு இருக்கும். உடம்பை விட்டுப் பிரிவதில்லை. ஆனால் செயலற்று இருக்கும். “நமது உடலை நாமே இறந்தது போன்று சலனமற்ற நிலைக்குக் கொணர்ந்து, நீர், உணவு ஏதுமின்றி சில நாட்கள் முதல் பல காலம் வரை வைத்திருத்தலையே” கூடுவிடா நிலை என்கின்றனர். (நமது சினிமாக்களில் தவத்தில் இருக்கும் கோது புற்று வளர்ந்து

இருந்தாலும் அதை அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். அதைப் புரிவதன் மூலம் இந்தக் கூடுவிடா நிலையை உணர

முடியும்.) இந்நிலையை அடையப் பிரத்தியேகப் பயிற்சி அவசியம். அத்தகு பயிற்சிகள் பற்றிய இரகசியங்களைச் சித்தர்கள் மிகமிக இரகசியமாகவே பேணிவந்துள்ளனர். இந்தக் கூடுவிடா நிலை இயற்கையாகவே மீன், தவளை போன்ற சில உயிரினங்களுக்கு உண்டு. இவ்வாறான உயிரினங்கள் இறந்தது போல் செயலற்றுக் கிடந்து மீண்டும் செயற்படுவதை நாம் பார்த்திருப்போம். பார்வைக்கு உயிரற்றது போல் அவை இருந்தாலும் உண்மையில் அவை இறந்து போகவில்லை. மாறாக கூடுவிடா நிலையிலேயே காணப்படுகின்றன. இவை உணவு, நீர் இன்றி அசைவற்று இருக்கும். உரிய காலம் வந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இவ்வாறானதொரு நிலையே கூடுவிடா நிலை எனலாம். அடுத்து, கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்பது தனது ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்கி மற்றுமொரு ஸ்தூல உடலுக்குள் செல்வதாகும். இது பல படிநிலைகளைக் கொண்டது.

அ) உடல் விட்டு உடல் தாவுதல் : ஒரு உடம்பில் இருந்து இன்னுமொரு உடம்பிற்குள் செல்லல் இதுவாகும். மனிதன், விலங்கு, பறவை, பூச்சிகள் என அனைத்து சரீரத்துள்ளும் பிரவேசம் செய்தல் இதுவாகும். (சூக்கும சரீரம் ஒன்றே. உடல் அமைப்பே வேறு என்பது சித்தர் நிலைப்பாடு)

ஆ) உடனிருப்போர் உடலுள் சென்று, அவர் மனதை இயக்க விடாமல் செய்தல். இது வெறுமனே ஆழ்மன வசப்படுத்தல் மாத்திரமே.

இ) தனது உடலினை விட்டு நீங்கி சூட்சும உடலுடன் பிரயாணம் செய்தல். இத்தகு சித்து வாயிலாகவே சித்தர்கள் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குக் கணப் பொழுதில் பிரயாணம் செய்கின்றனர்.

இவ்வாறாக இக் கூடுவிட்டுக் கூடுபாய்தலில் பல படி நிலைகள் உள்ளன எனலாம். உடலை விட்டு உடல் தாவும் சித்தி என்பது மரத்தை விட்டு மரம் தாவும் செயலல்ல. இச்சித்தியைத் தனதாக்க பல தடைகள் தாண்ட வேண்டும். கூடுவிட்டுக் கூடுபாயும் கலை பற்றிய சில அம்சங்களை போகள், சின்ன வாத்தியார் போன்ற தமிழ் சினிமாக்கள் தொட்டுச் சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடற்குரியது.

பரகாய பிரவேச மந்திரம் – Sattaimuni Nathar – Siththarkal – Sithargal – Sithar

பரகாயப் பிரவேசம் தொடரும் . . .

கூடு விட்டுக் கூடு பாய்தல் பகுதி 2

தொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர் . த.கி.ஷர்மிதன்.