குளத்தில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்பு இருவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் குளத்தில் குளித்துக் களித்து பொழுதைப் போக்குவதற்காகச் சென்ற ஐவரில் ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மாலை 06.08.2018 இடம்பெற்ற இச்சம்பவத்தில் பலாச்சோலை எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசா ஜெயசுதன் (வயது 16) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகளில் மீனவர்களும் பிரதேசப் பொதுமக்களும் பொலிஸாரும் படையினரும் ஈடுபட்டிருந்த வேளையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நண்பர்களாகச் சென்ற ஐந்து பேர் உறுகாமக் குளக்கரையில் காணப்பட்ட ஒரு தோணியை வலித்துக் கொண்டு குளத்தின் நடுவே அமைந்திருக்கும் உம்மாரிக்கல்முனை எனும் கற்பாறைக்குச் சென்றுள்ளனர்.

அவ்வேளையில் இவர்கள் சென்ற தோணி தற்போது இப்பகுதியில் வீசும் பலத்த கச்சான் காற்றுக் காரணமாக புரட்டிப் போடப்பட்டுள்ளது.

இதனால் தோணியில் பயணித்த ஐவரில் மேற்படி மாணவன் காணாமல் போக ஏனைய இருவரும் நீந்தித் தப்பியுள்ளனர். இவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேவேளை குளத்தில் மூழ்கிய நிலையில் கொம்மாதுறையைச் சேர்ந்த விஜயநாதன் விஜயகாந்தன் (வயது 21) மற்றும் தங்கராசா ஜெயசுதாகரன் (வயது 19) ஆகிய இருவரும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு உடனடியாக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குளத்தில் குளத்தில்

இளைஞனின் சடலம் உம்மாரிக்கல்முனை கற்பாறையிலிருந்து சுமார் 50 மீ;ற்றர் தூரத்தில் தோணி கவிழ்க்கப்பட்ட சுற்றுவட்டாரத்தில் நீரில் அமிழ்ந்த நிலையில் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சடலம் உடற் கூறாயவுப் பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது.

இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]