குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட வேண்டும்

பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், நேற்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்தில் உள்ள, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “ ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அநேகமான விடயங்கள் குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அரசாங்கம், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது, இதனை நிறைவேற்றுவதற்கு மேலதிக காலஅவகாசத்தையும் கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது. ஆகவே அரசாங்கம், தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது.

கடந்தகால சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கு, ஒரு புதிய அரசியலமைப்பு, அங்கீகரிக்கப்படுவது அவசியம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், உள்ள அம்சங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளது.

இந்த விடயங்களில் தமது சொந்த மக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் அனைத்து அழுத்தங்களையும் கொடுக்கும், அதேவேளை தொடர்ந்தும் இந்த கருமங்களில் எமது ஈடுபாட்டினை கொண்டிருப்போம்.

வடக்கு – கிழக்கில் காணிகள் விடுவிப்பு மந்த கதியிலேயே நடக்கிறது. எமது காணிகளில் இராணுவம் பண்ணைகள் நடத்துவதனை அனுமதிக்க முடியாது.

அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகைய பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

அரசாங்கம், தீவிரவாத போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுப்பது, இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைகின்றது.

இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வருவதில் பெரும்பங்காற்றிய எமது மக்கள், கடந்த காலத்தில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்ட முடியாமையினால் அதிருப்தி அடைத்துள்ளார்கள்.

எமது இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் சில விடயங்கள் செய்யப்படுவதன் முக்கியத்துவத்தை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பொறுப்புக்கூறல் விடயத்தில், நாங்கள் முழு இராணுவத்தினையும் குற்றவாளிகள் என்று கூறவில்லை. ஆனால், நிச்சயமாக பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் இணைந்து பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிடுகையில், “காணிகள் விடுவிப்பு தொடர்பாக முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல், அரசாங்கம் முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]