குற்றச்சாட்டு நிரூபிக்கபடாதவர்கள் தொடர்பில் விக்னேஸ்வரன் எடுக்கவுள்ள நடவடிக்கை கைவிடப்படவேண்டும் : சம்பந்தன் கோரிக்கை

குற்றச்சாட்டு நிரூபிக்கபடாத வடக்குமாகாண அமைச்சர்களான ப. சத்தியலிங்கம், பா. டெனிஸ்வரன் ஆகியோர் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுக்கவுள்ள நடவடிக்கை கைவிடப்படவேண்டும் என்றும் அதற்கான திருத்த நடவடிக்கையை தாமதிக்காதுசெய்து முடிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்குமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மூவரடங்கியக்குழுவின் அறிக்கை அண்மையில் வடக்குமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் வடமாகாண விவசாய அமைச்சரான பொ. ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராசாவும் பதவி துறக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், ஏனைய இரு அமைச்சர்களும் குற்றமற்றவர்களென தெரிவித்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, கல்வி அமைச்சரையும், விவசாய அமைச்சரையும் பதவி துறக்குமாறு கோரிக்கை விடுத்த வடக்கு முதல்வர், விடுவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மற்றுமொரு விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டு அவர்களுக்கு ஒருமாதகாலம் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு அறிவித்தார். இதையடுத்தே வடக்கு அரசியல் களத்தில் குழப்பம் ஏற்பட்டது.

குற்றமறற்வர்களென விடுவிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக முதல்வர் எடுக்க தீர்மானித்த நடவடிக்கைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், மாகாண முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் 22 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கையளித்தனர். இதனால், குழப்பநிலை மேலும் உக்கிரமடைந்தது.கடையடைப்பு போராட்டம், ஆதரவுப் பேரணி, அதிரடி அறிக்கைகள் என வடக்கு அரசியல் களம் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.

குற்றச்சாட்டு

குற்றமற்றவர்களென விடுவிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடவேண்டும் என்று முதல்வரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. கடந்த வெள்ளியன்று கடிதம் மூலம் கோரியிருந்தார். இதற்கான பதில்கடிதத்தை முதல்வர் நேற்று முன்தினம் சம்பந்தனுக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே முதல்வர் விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றுமொரு கடிதத்தையும் நேற்று அனுப்பினார்.

அதன்விவரம் வருமாறு,

‘எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.

உங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.

விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.

இந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென நான் கருதவில்லை. ஆதலால் தாங்கள் தாமதமின்றிச் செயற்பட வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக திரு.மாவை சேனாதிராஜா அவர்களும்,தற்போதைய செயலாளர் நாயகமாக

திரு.கே.துரைராஜசிங்கம் அவர்களும் உள்ளனர். இ.த.அ.கட்சியின் மத்திய செயற்குழு ஒழுங்காகக் கூடுகின்றது. நான் இ.த.அ.கட்சியின் ஒரு சிரேஷ;ட உறுப்பினர் என்பதோடு, ஒரு காலத்தில் அதன் தலைவராகவும் இருந்தேன். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே எப்பொழுதும் எனக்கு உரித்தான அரசியல் இயக்கங்களாகும்.

வடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தலைவர்களின் முன்பாகவும் திரு.மாவை சேனாதிராஜாவிடம் நீங்கள் கூறினீர்கள், வடமாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக. இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.

எவ்வாறாயினும், இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன்.

தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]