கிழக்கு மாகாண அரச பாடசாலைகளில் தமிழ் மொழி மூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதில் இடம்பெற்ற வெளிப்படையான இன ரீதியான பாரபட்சம் – எம்.ரீ.ஏ. நிஸாம்

கிழக்கு மாகாண அரச பாடசாலைகளில் தமிழ் மொழி மூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதில் இடம்பெற்ற வெளிப்படையான இன ரீதியான பாரபட்சம் குறித்து மத்திய கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகக் கேட்டபோது ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 அவர் விவரங்களைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு 216 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் 88 பேர் தமிழ் மொழி மூலமானவர்கள், 128 பேர் சிங்கள மொழிமூலமானவர்கள்.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும் பொருட்டு நியமனம் வழங்கப்படவுள்ளவர்களின் பெயர் விபரங்களை மத்திய அரசின் நிரல் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நான் உடனடியாக மத்திய அரசின் நிரல் கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்புப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளே அதிகம் உள்ளதையும் ஆயினும் அதற்கு நேரெதிர் மாறாக குறைவாக உள்ள சிங்கள மொழிமூலப் பாடசாலைகளுக்கு அளவுக்கதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டியல் வெளியாகியிருக்கும் விடயத்தையும் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன்.

நியமிக்கப்படவுள்ள 88 தமிழ் மொழி மூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு போதுமான எண்ணிக்கை அல்ல என்பதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நான் இந்த விடயத்தை நிரல் கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பான அதிகாரிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு அமைவாக இது விடயமாக தாங்கள் மேலும் 73 தமிழ் மொழிமூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிடப்புப் பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக விண்ணப்பங்களைக் கோரியோ மேலதிகமான தமிழ் மொழிமூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நிரல் கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பான அதிகாரி உறுதியளித்தள்ளார் எனவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]