முகப்பு News Local News கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை 28வது வருட நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை 28வது வருட நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 வது ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை (05) பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலநதுகொண்டனர்.

காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 ஆண்டு நடுப்பகுதியில் அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில் உயிர் அபாயம் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். ஆங்கு செப்டம்பர் 5ஆந் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவ தினமன்று காலை 6மணிக்கு முன்னரே கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் இயங்கிய அகதி முகாம் இராணுவத்தினர் மற்றும் அவ்வேளை இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ்; ஆயுதக்குழுக்களாலும் சுற்றிவளைக்கப்பட்டது.

கொம்மாதுறை இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினரே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்பில் அவ்வேளை இராணுவ புலனாய்வில் செயற்பட்ட கப்டன் முனாஸ்; (றிச்சட் டயஸ்) கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, மேஜர் மஜீத், புளொட் மோகன் ஆகியோரும் வந்திருந்தாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணையின் போது சாட்டசியமளித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி த.ஜெயசிங்கம், கலாநிதி வி.சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மைதானத்தில் வரிகையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு முகமூடியினால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை வருடங்கள் 28 கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூறுகிறார்கள்.

இந்த இராணுவ சீருடையில் காணப்பட்ட முகமூடி நபர்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ்; ஆயுதக்குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம்களாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களிடம் காணப்படுகிறது.

இளைஞர்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கிழக்குப் பலகலைக் கழக அகதி முகாம் அல்லோல கல்லோகப்பட்டது. எங்கும் அழுகைக் குரல்களையே கேட்க முடிந்தது. அவ்வேளை அந்த பிரதேசத்திலும் மாவட்டத்திலும் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அவர்களைத் தேடிச் செல்ல முடியாதவாறு உறவினர்களும் முகாமுக்குள் முடங்கிக் கிடந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது.

செப்டம்பர் 5ஆம் திகதி அன்றைய தினம் 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது அழைத்துச் சென்றதாகவும் 24மணிநேரத்திற்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராப் பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ இதற்கான பதிலை அனுப்பியிருந்தார். இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது.

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர்.

இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்து சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும்தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக் கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணமல் போனவர்களின் விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆந் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com