கிழக்கில் ஆசிரியர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் மற்றும்  கல்விப் புலத்திலுள்ள சில உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளால் விடுவிக்கப்பட்டிருப்பதுடன் அவர்களை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கல்விபுலத்திலுள்ளவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் புதன்கிழமை (06) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – “கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையான பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வியில் பெரும் தாக்கம் ஏற்படுள்ளது. இந்த நிலையில் சில அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்களை விடுவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களிலும், மூதூர், கிண்ணியா போன்ற கல்வி வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் பாட மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றன. இதனால் பீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

ஆதனைக் கருத்திற்கொள்ளாமல் மாகாண கல்வித் திணைக்களம் சில ஆசிரியர்களை விடுவித்து அரசியல்வாதிகளுடன் இணைத்துள்ளமை தரமான ஆசிரியர் சேவைக்குரிய தரத்தைக் கொச்சைப்படுத்தியிருப்தோடு மாணவர்களின் கல்வி உரிமையினையும் மீறியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைப்பிரமான குறிப்புக்கு அமைவாக ஆசிரியரின் சேவைப் பணிக்கு முரணாக ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதும் தாபனக் கோவைகளுக்கு முரணாக செயற்படுவதும் கண்டிக்கத்தக்கது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலும் ஆசிரியர் ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் பதவிகளுக்கு நியமிப்புச் செய்வதில் அரசியல் தலையீடுகள் நடைபெற்றுள்ளன. சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் அரசியல்வாதிகளின் பிரதிநிதிகளாகவே செயற்படுகிறார்கள்.

எனவே கிழக்கு மாகாணத்தில் விடுவிப்பு செய்யப்பட்டு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் கல்விப்புலத்திலுள்ளவர்களை உடன் செயற்படுவம் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் முன்பு சேவையாற்றிய பாடசாலைகளுக்கு திரும்பவும் அனுப்புவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]