தன்னை நிராகரித்த அணிகளுக்கு கிறிஸ்கெயில் கொடுத்த பதிலடி- அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஐபிஎல் ஏலத்தில் தன்னை நிராகரித்த அணிகளுக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறார் கிறிஸ் கெயில். ’சிங்கம் சிங்கம்தான்’ என்பதை நிரூபித்திருக்கிறது அவரது பேட். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கெயிலை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. அவர் ஆடிய பெங்களூர் அணியும் கைவிட்டுவிட்டது.

இரண்டாவது முறையாக அவர் ஏலத்துக்கு வந்தபோது, பஞ்சாப் அணியின் வீரேந்திர சேவாக் அவரை எடுத்தார். அவர் எடுக்கப்படாததற்கு மோசமான ஃபார்ம் காரணம் என்றும் ’வயதாகிவிட்டது, இனி என்னத்த அடிக்கப் போறார்?’ என்றும் கூறி வந்தனர். இப்போது அந்த விமர்சனங்களுக்கு அதிரடியால் பதில் சொல்லியிருக்கிறார் கிறிஸ் கெயில்.

மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் சதமடித்து, மிரட்டியிருக்கிறார் கெயில். இதில் 11 சிக்ஸர்களும் அடங்கும். இவரின் அதிரடி காரணமாக வென்றிருக்கிறது பஞ்சாப் அணி. ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த சதம் பற்றி கிறிஸ் கெயில் கூறும்போது, ‘உலகில், எந்த அணிக்காக நான் ஆடினாலும் அந்த அணிக்காக அர்ப்பணிப்போடுதான் விளையாடுகிறேன். கிறிஸ் கெயில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று பலர் கூறினார்கள். ஆனால், யாருக்கும் எதையும் நான் நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பேட்டியில் வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘கிறிஸ் கெயில் 2 போட்டிகளை வெற்றிப்பெற்றுக்கொடுத்தால், நாங்கள் அவருக்கு கொடுத்த பணத்துக்கு அது சமமாகிவிடும்’ என்று கூறியிருப்பது பற்றி அவரிடம் பேச இருக்கிறேன்.

என்னை ஏலத்தில் எடுத்திருப்பதன் மூலம் ஐபிஎல்-லை காப்பாறியிருக்கிறார் சேவாக். இந்தப் போட்டியில் நூறு சதவிகிதம் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன் . நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நாளை (இன்று) எனது மகளுக்குப் பிறந்த நாள். அவளுக்கு இந்த சதத்தை சமர்ப்பிக்கிறேன். அவளுடன் நேரத்தைச் செலவிட இருக்கிறேன்’ என்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ‘கிறிஸ் கெயில் இந்தப் போட்டியில் அபாரமாக ஆடினார். சிக்சர்களாக விளாசி ரசிகர்களை குஷிபடுத்தினார். அவர் ஆட்டத்தை பற்றி ஒரே வார்த்தையில் பேசி முடித்துவிட முடியாது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருந்தது. இன்னும் 10 ரன் அதிகமாக எடுத்திருக்கலாமோ என்றும் இந்த ரன்னை அவர்கள் எட்டிப்பிடித்துவிட முடியும் எனவும் நினைத்தோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. பவர்பிளேயில் நாங்கள் சிறப் பாக விளையாடி ரன்கள் சேர்த்தது உதவியாக இருந்தது’ என்றார்.