கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு மீண்டும் உடைப்பெடுத்தது- புதிய நிரந்தர அணையை துரித கதியில் அமைத்துத்தருமாறு விவசாயிகள் வேண்டுகோள்

கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு மீண்டும் உடைப்பெடுத்தது- புதிய நிரந்தர அணையை துரித கதியில் அமைத்துத்தருமாறு விவசாயிகள் வேண்டுகோள்

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட கிரான்புல்சேனை அணைக்கட்டு கடந்த சில தினஙற்களாக பெய்துவரும் அடை மழை வெள்ளம் காரணமாக உடைபெடுத்துள்ளது. இதன் காரணமாக ஆயரக்கணக்கான ஏக்கர் வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்துள்ளது.

1957ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக இவ்வணைக்கட்டு முற்றாக சேதமடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் இரண்டு தடவைகள் இவ்வணை மண் அணையாக அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த அணை தற்காலிக அணையாகவே இருந்து வருவதால் ஒவ்வொருமுறையும் ஏற்படும் வெள்ளத்தினால் இது சேதமடைவது நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மீண்டும் மீண்டும் இவை மண்அணையாக அமைக்கப்படுவதும் என ஒவ்வொரு தடவையும் சுமார் 3.5 மில்லியன்கள் வரை செலவிடப்பட்டு வருகின்றது.

நிலைமை இவ்வாறு இருக்க கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட கிழக்கு மாகாண ஆட்சிமாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விவசாய அமைச்சினைப் பெறுப்பேற்று விவசாய அமைச்சராக இருந்த கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் முயற்சியால் இவ்வணையை நிரந்தரமாக அமைப்பது தொடர்பில் ஆராய்வது தொடர்பாக கடந்த 2017.08.04ம் திகதி மத்திய நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இவ்வணை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

இதன் படி தற்போது மண்அணையாக அமைக்கப்பட்ட இந்த அணை அமைந்துள்ள இடம் புதிதாக நிரந்த அணை அமைப்பதற்கு சாத்தியமற்றதாக இருப்பதனால் மயிலவெட்டுவான் பிரதேசத்தில் இவ்வணைக்கட்டினை அமைப்பதற்கு ஏதுவான பல காரணிகள் கண்டறியப்பட்டு அங்கு வேலைப்பாடுகள் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் கடந்த 2017.09.24ம் திகதி இவ்வணைக்கட்டு அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு நிகழ்வு அப்போதயை கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் தலைமையில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அப்போதைய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. அதன் பின்னர் அதற்கான ஆரம்பகட்ட வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறு இருக்கையில் தற்போது இருக்கின்ற இந்த மண்மேட்டு அணையானது வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்துள்ளது. வெள்ளம் வடிவதைப் பார்த்து இம் மண் அணையை மீண்டும் அமைத்தால் மட்டுமே இப்போது விதைக்கப்பட்டள்ள காலபோக வேளாண்மையை அறுவடை செய்ய முடியும். இதற்காக மீண்டும் நீர்ப்பாசனத் திணைக்களம் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்வானது இக் கிரான்புல்சேனை அணைக்கட்டானது துரித கதியில் நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டிய கட்டாயத்தினையே சுட்டிநிற்கின்றது.

கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அரசியலாளர்கள், அதிகாரிகள் இன்னும் கூடிய கரிசனை எடுத்து துரிதமாக செயற்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிரான்புல்சேனை நிரந்த அணைக்கட்டினைப் பூர்த்திசெய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]