கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைக்கப்பட்டே தீரும்…
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டினை நாங்கள் அமைத்தே தீருவோம். இது தொடர்பில் மக்கள் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளும் போதே அதன் வெற்றியை நாங்கள் பெற முடியும் என கித்துள், உறுகாமம், கிரான்புல்சேனைதிட்டங்களுக்கான பணிப்பாளரும் நீர்ப்பாசன திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகமுமான எஸ்.சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.
கிரான்புல்சேனை அணைக்கட்டு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அதன் ஆரம்ப கட்ட வேலைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக கித்துள், உறுகாமம், கிரான்புல்சேனை நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.சிவபாதசுந்தரம் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை (10) கொழும்பில் இருந்து விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது பணிப்பாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் அமைச்சர் அவர்களினால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்நேரத்தில் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக கற்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த ஆற்றின் நடுவில் இருக்கும் கல் தொடர்ச்சியாக 11 மீட்டர்வரை காணப்படுகின்றது. இது இங்கு பாலம் அமைப்பதற்கு சாதகமான ஒரு தன்மையாக இருக்கின்றது. இந்த இடத்தில் முதலில் நாங்கள் பாலம் அமைப்பதாக தீர்மானித்துள்ளோம்.
06 மீட்டர்கள் அகலமான பாலத்தை அமைக்கவுள்ளோம். அதற்கு 500 மில்லியன்கள் தேவைப்படுகின்றன. அதன் பின்னர் இப்பாலத்திற்கு கதவு அமைப்பதற்கு 150 மில்லியன்கள் தேவைப்படுகின்றன. தற்போது நாங்கள் இவ்வணைக்கட்டிற்கான இவ்வருட வேலைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இதற்கான ஆய்வு வேலைகள் நிறைவடைந்துள்ளன.
அத்துடன் முந்தன்குமாரவேலி ஆற்றின் இருபுறத்தையும் சற்று அகட்டும் போது வெள்ள அனர்த்த காலங்களில் இவ்வணைக்கட்டிற்கு ஆபத்து ஏற்படாத வகையில் செய்ய முடியும் என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளோம். தற்போது இதன் வடிவமைப்பு மற்றும் வரைபு வேலைகள் மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வணைக்கட்டினை நாங்கள் அமைத்தே தீருவோம். மக்கள் இது தொடர்பில் தவறான பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம். இதனை அவசரத்தில் மேற்கொள்ள முடியாது, ஒழுங்கு முறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ள வேண்டும். இதற்கான போதியளவு நிதி எங்களுக்குக் கிடைக்கும். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளும் போதே அதன் வெற்றியை நாங்கள் பெற முடியும் என்று தெரிவித்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]